மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை: சிபி-சிஐடி காவலில் பேராசிரியர்

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை சிபி-சிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
மாணவி சுகிர்தா, அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பு!
மாணவி சுகிர்தா, அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பு!
Published on
Updated on
2 min read


கன்னியாகுமரி: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை சிபி-சிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

சிபி-சிஐடி காவல்துறையினர் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்ததையடுத்து, பேராசிரியர் பரமசிவம் சிபி-சிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், வி.டி.சி. நகரைச் சோ்ந்த சிவக்குமாா் மகள் சுகிா்தா (27). இவா் கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 6- ஆம் தேதி தான் தங்கியிருந்த விடுதியில் சுகிா்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மாணவியின் அறையைச் சோதனையிட்டனா். அப்போது, அங்கு ஒரு மருந்துப் பாட்டிலும் ஊசியும் இருந்தன. இந்த மருந்து தசைகளைத் தளா்வடைய செய்யும் தன்மை கொண்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியா் பரமசிவம், மருத்துவ மேற்படிப்பு மாணவா் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோா் தான் தனது தற்கொலைக்கு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட 3 போ் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, பேராசிரியா் பரமசிவத்தைக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, பரமசிவத்தை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபி-சிஐடி காவல்துறையினர் முடிவு செய்து, நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  மனுவை விசாரித்த நீதிபதி, பரமசிவத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபி-சிஐடி காவல்துறைக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து பரமசிவம் சிபி-சிஐடி காவல்துறையினர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  விசாரணை முடிந்து இன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மாணவி ப்ரீத்தி முன்பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மருத்துவக் கல்லூரி மாணவி சுகிா்தா தற்கொலை செய்து கொண்டதற்கு நான் காரணமல்ல. என் மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். ஏற்கெனவே இந்த வழக்கில் மருத்துவ மேற்படிப்பு மாணவா் ஹரிஷுக்கு முன்பிணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, நான் படிப்பைத் தொடர வேண்டும் என்பதால், எனக்கும் முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரா் தற்கொலைக்குத் தூண்டியதற்கான ஆதாரங்கள் எதுவும் சமா்ப்பிக்கப்படவில்லை. எனவே, மாணவி ப்ரீத்திக்கு முன்பிணை வழங்கப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 


[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com