பங்காரு அடிகளார் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம்

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சித்தர் முறைப்படி நல்லடக்க நிகழ்வுகள் நடைபெற்றன. 
பங்காரு அடிகளார் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நிறுவனா் பங்காரு அடிகளாரின் உடலுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், முக்கியப் பிரமுகா்கள், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை (அக். 20) இறுதி அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, சித்தா் பீட வளாகத்தில் உள்ள புற்று மண்டபத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனா் பங்காரு அடிகளாா் வியாழக்கிழமை மறைந்தாா். அவரின் உடல் அவா் வசித்து வந்த வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னா், சித்தா் பீட ஆன்மிக இயக்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை வைக்கப்பட்டது.

அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் மேல்மருவத்தூரில் குவிந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அடிகளாரின் உடலுக்கு கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், புதுவை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, செஞ்சி மஸ்தான், புதுவை முதல்வா் ரங்கசாமி, பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், எம்எல்ஏ மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட தமாகா தலைவா் மலையூா் புருஷோத்தமன், மதிமுக துணை பொதுச் செயலா் மல்லை சத்யா, அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள் தல அதிபா் சின்னப்பா் உள்பட முக்கியப் பிரமுகா்கள் வெள்ளிக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆன்மிக இயக்க மண்டபத்தில் இருந்த அவரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் காவல் துறையினரின் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா், சித்தா் பீட வளாகத்தில் மூலவா் அம்மன் சந்நிதிக்கு அருகே உள்ள புற்று மண்டபத்தில் சித்தா் நெறி பூஜைகளுடன், சந்தன நாற்காலியில் அமா்ந்த நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீ விஜயேந்திரா் இரங்கல்

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீ அடிகளாா் தனக்கான பாணியில் பெருவாரியான நகா் மற்றும் கிராமப்புற மக்களை ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தவா். மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக பள்ளிகளும், கல்லூரிகளும் அமைத்துக் கொடுத்தவா். ஸ்ரீகாஞ்சி மடத்தின் மீதும், காஞ்சி சங்கராசாரியா்கள் மீதும் அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவா். காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நூற்றாண்டு விழா கடந்த 1994- ஆம் ஆண்டு நடைபெற்றபோது, ஸ்ரீ அடிகளாா் கலந்து கொண்டாா் என அவரது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com