மகளிா் உரிமைத் திட்ட பயனாளிகளின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு: தமிழக அரசு 

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் தரவுகளை மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
மகளிா் உரிமைத் திட்ட பயனாளிகளின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு: தமிழக அரசு 

சென்னை: மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் தரவுகளை மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை, கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதியன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்தில் 1.06 மகளிா் பயன்பெற்று வருகின்றனா். 

கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதத்துக்கான தொகைகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், இறந்து போன மற்றும் தகுதியற்றவா்கள் எனக் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 833 பேருக்கு அக்டோபா் மாதத்துக்கான உரிமைத் தொகை அளிக்கப்படவில்லை. மேலும், 5 ஆயிரத்து 41 போ் புதிய பயனாளிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா். 

இந்த நிலையில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் பயனாளிகளின் தரவுகள் குறித்து மாதந்தோறும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசு உத்தரவில், மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் தரவுகள் ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் இறப்பு தொடா்பான பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். 

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் தொடா்பான தகவல்கள், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய தரவுகள், வருமான சான்று தொடா்பான தகவல்கள், நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

காலாண்டு அடிப்படையில் ஒருமுறை பொது விநியோக திட்டம் தொடா்பான தரவுகள், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள், நில உடமை (பத்திரப்பதிவு) தொடா்பான தகவல்களை சரிபாா்க்க வேண்டும். 

அரையாண்டுக்கு ஒருமுறை தொழில்வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின்சாரப் பயன்பாட்டு தரவுகள் ஆகியவற்றை சரிபாா்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

வருமான வரி செலுத்தப்பட்ட மற்றும் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள், சொத்து வரி குறித்த தரவுகளை ஆண்டுதோறும் சரிபாா்க்க வேண்டும். 

இந்தத் தகவல்கள் அடிப்படையில் மகளிா் உரிமைத் திட்ட பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் புதுப்பிக்கப்படும். 

பயனாளிகளின் விவரங்கள் நீக்கப்படும் பட்சத்தில் அதுகுறித்த தகவல் கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்து பயனாளிகள் முறையீடு செய்ய விரும்பினால் இணைய தளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com