'மோடி அரசின் முகமூடி கிழிந்து தொங்குகிறது' - சு. வெங்கடேசன் எம்.பி.

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் ரூ. 25 லட்சம் கோடி வாராக்கடன் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் ரூ. 25 லட்சம் கோடி வாராக் கடன் இருப்பது தெரிய வந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தைவிட இது 8 மடங்கு அதிகம் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: 

மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் 25 லட்சம் கோடி வாராக்கடன்.

மன்மோகன்சிங் காலத்தைவிட எட்டு மடங்கு அதிகம்.

ஆர்.டி.ஐ கேள்விக்கு ரிசர்வ் வங்கி அதிர்ச்சி பதில்.

எதற்கெடுத்தாலும் நேருவில் துவங்கி மன்மோகன் சிங் மீதே பழி போடும் நரேந்திர மோடி அரசின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. மன்மோகன் சிங் கால 10 ஆண்டுகளில் வாராக்கடன் ஆன தொகை 17 மாதங்களில் மோடி ஆட்சியில் ஸ்வாஹா.

மன்மோகன் சிங் காலத்தில் ஆண்டு சராசரி வாராக்கடன் ரூ. 34,192 கோடி... மோடி ஆட்சியில் ஆண்டுக்கு ரூ. 2.77 லட்சம் கோடி அபகரிப்பு. மன்மோகன் சிங் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் மொத்த வாராக்கடன் ரூ. 3.76 லட்சம் கோடி... மோடி ஆட்சியில் ரூ. 24.95 லட்சம் கோடி. நிதியமைச்சர் வாராக்கடன் என்றாலே நீண்ட வகுப்பு எடுப்பார். வாராக்கடன் என்றால் வஜா கடன் அல்ல என்று... வாராக்கடன் என்று கணக்குகளில் காண்பித்த பின்னரும் வசூல் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று. 

25 லட்சம் ரூபாய் வாராக்கடன் ஆகி இருக்கும் 9 ஆண்டுகளில் அவற்றில் வசூல் ஆகி இருப்பது எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ. 2.5 லட்சம் கோடி. 10 சதவீதம்தான். பெரும் கார்ப்பரேட்டுகள் வைத்துள்ள பாக்கியே இதில் பெரும் பகுதி. அவர்களின் பெயர்களை வெளியிடு என்றால் ரிசர்வ் வங்கி சொல்கிறது, அது பரம ரகசியம். யாருடைய பணம் இது? இந்தியா முழுவதும் அரும்பாடுபட்டு, தமது பெரும் உழைப்பை செலுத்தி சாதாரண நடுத்தர மக்கள் சேமித்து வைத்திருக்கிற வியர்வை, ரத்தம், மோடி அரசே!

மக்களுக்கு சொல்... யார் யார் வாராக்கடன் வைத்திருக்கிறார்கள். யார் யாருக்கு "ஹேர் கட்" என்ற பெயரில் வஜா செய்துள்ளீர்கள்? இவை எல்லாம் பரம ரகசியம் எனச் சட்டம் சொல்கிறது என்றால் சட்டத்தை திருத்துங்கள். அம்பானி, அதானிகளுக்காக உங்கள் பேனா ஆயிரம் திருத்தம் செய்யுமென்றால் அப்பாவி மக்களின் சேமிப்புகளைப் பாதுகாக்க உங்கள் பேனா அசையாதா? என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com