மாயூரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழைமைவாய்ந்த மாயூரநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள் மற்றும்  பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் விமான கலசத்தில் புனிதநீர் வார்த்து நடைபெற்ற கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் விமான கலசத்தில் புனிதநீர் வார்த்து நடைபெற்ற கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழைமைவாய்ந்த மாயூரநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.


பார்வதிதேவியின் தந்தை தட்சன் மயிலாடுதுறையை அடுத்த பரசலூரில் நடத்திய யாகத்துக்கு, சிவபெருமானை அழைக்காமல் அவமதித்ததால் பார்வதி தனது உருவத்தைவிட்டு மயில் உரு கொண்டு சிவனை பூஜித்ததாக வரலாறு. பார்வதி மயில் உருகொண்டு ஆடிய தலம் என்பதால் இவ்வூர் மயிலாடுதுறை என வழங்கப்பெறுகிறது. 


பெரிய கோயில் என்று மயிலாடுதுறை பக்தர்களால் அழைக்கப்படும் அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் கோயில் மிகவும் 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பழைமைவாய்ந்த, கிழக்கு நோக்கிய 9 நிலை கொண்ட 160 அடி உயர ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் ஆகும்.


முற்காலத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் சிவபெருமானிடம் சென்று, எல்லோரும் வந்து நீராடுவதால் பாவங்கள் எல்லாம் சுமந்து ஒளி குன்றி கறுத்து விட்டதால், தங்கள் பாவத்தை கழுவ இடம் அருள வேண்டியபோது, பெருமான் துலா மாதமாக ஐப்பசி மாதத்தில் மாயூரத்தில் இடபதீர்த்தத்தில் மூழ்கி போக்கிக் கொள்ள அருளியதாகவும், தீர்த்தங்கள் அவ்வாறே வந்து நீராடி மாயூரநாதரை வழிபட்டு புனிதம் அடைந்ததாகவும் ஐதீகம். இதனால், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்கி புனித நீராடிச் செல்வர்.  


சிறப்புகள் பல வாயந்த இக்கோயிலில் கடைசியாக 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, கோயில் முழுவதும் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலில் மாயூரநாதர், அபயாம்பிகை சன்னதிகளின் தங்க முலாம் பூசப்பட்ட 2 கலசங்கள், ராஜகோபுரத்தின் 9 கலசங்கள் உள்ளிட்ட 88 கலசங்கள் விமானத்தில் நிர்மாணிக்கப்பட்டது. காவிரி, கங்கை, யமுனா, சரஸ்வதி, சிந்து கோதாவரி, நர்மதை, துங்கபத்ரா, மனோன்மனி ஆகிய ஆறுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் கடங்களில் நிரப்பப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.


கோயிலில் அமைக்கப்பட்ட பிரமாண்ட யாகசாலையில் 123 குண்டங்கள் வைக்கப்பட்டு, முதல்கால யாகசாலை பூஜை புதன்கிழமை துவங்கியது. 
ஓதுவார்களின்  82 மணி நேர அகண்ட பாராயணம், பன்னிரு திருமுறை, திருமுறை பண்ணிசை, சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில்; பரத நிகழ்ச்சி, ஆகம சிவநெறி சிந்தனை சொற்பொழிவுகள் ஆகியன நடைபெற்றது.


ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 8-ஆம் கால யாகசாலை பூஜை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் தொடங்கியது. தொடர்ந்து, மகா பூர்ணாஹ_தி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டு, சிவாசாரியர்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயில் விமானத்தை அடைந்து, காலை 7.30 மணியளவில் விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், காலை 8 மணியளவில் மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சௌந்தர், ஆதிகேசவலு, சிவஞானம் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com