விவசாயிகளுக்கான மத்திய அரசின் நிதியுதவி: கேரளம் முன்னில்; தமிழகம் பின்னில்!

 விவசாயிகளுக்கான மத்திய அரசின் கௌரவ நிதி உதவித் திட்டத்தின் மூலம் பயனடையும் தமிழகப் பயனாளிகளின் எண்ணிக்கை கேரளத்தைவிட குறைவாக உள்ளது.
விவசாயிகளுக்கான மத்திய அரசின் நிதியுதவி: கேரளம் முன்னில்; தமிழகம் பின்னில்!

 விவசாயிகளுக்கான மத்திய அரசின் கௌரவ நிதி உதவித் திட்டத்தின் மூலம் பயனடையும் தமிழகப் பயனாளிகளின் எண்ணிக்கை கேரளத்தைவிட குறைவாக உள்ளது. எனவே, தகுதியான பயனாளிகளை இந்தத் திட்டத்தில் இணைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
 பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டம், கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 6,000 வழங்கப்பட்டு வருகிறது. 2018-19 நிதியாண்டில், டிசம்பர் - மார்ச் வரையிலான காலாண்டின் முதல் தவணைக்கான நிதி 2019 பிப்ரவரி 24-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.
 நாடு தழுவிய முதல் தவணையில் 3.16 கோடி விவசாயிகளுக்கு கௌரவ நிதி, வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. 2019- 20, 2020-21, 2021-22 என அடுத்தடுத்த 3 ஆண்டுகளில் நிதி உதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை முறையே 8.96 கோடி, 10.23 கோடி, 11.16 கோடி எனத் தொடர்ந்து அதிகரித்தது.
 இதனிடையே 2022-ஆம் ஆண்டு, நிலம் இல்லாத விவசாயிகளுக்கான பயனாளிகள் பட்டியலில் பலர் இடம் பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டது. மேலும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணையும் பயனாளிகள் இணைத்தால் மட்டுமே நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த இரு விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, கடந்த டிசம்பர் - மார்ச் மாதத்துக்கான பயனாளிகளின் எண்ணிக்கை 8.81 கோடியாகக் குறைந்தது.
 தமிழகப் பயனாளிகள் 20.95 லட்சம்
 இதேபோல, தமிழகத்தில் சுமார் 46 லட்சம் பேர் முதல் தவணைக்கான நிதி உதவியைப் பெற்ற நிலையில், 12-ஆவது தவணைத் தொகையை 25.25 லட்சம் பயனாளிகள் மட்டுமே பெற முடிந்தது.
 ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயனாளி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் நீக்கம் (தொகுதி 4 வகை அரசு ஊழியர்களைத் தவிர), மாதம் ரூ.10,000-க்கு கூடுதலாக ஓய்வு ஊதியம் பெறுவோர் நீக்கம், பதிவுப் பெற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோரும் பயன் பெற முடியாது என்பன உள்ளிட்ட விதிமுறைகளால், 20 லட்சம் பேர் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
 இதற்கிடையே, பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13-ஆவது தவணைத் தொகையைப் பெற வேண்டுமெனில், பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரும்கூட, சுமார் 20 லட்சம் பேர் மட்டுமே முழு விவரங்களையும் சமர்ப்பித்து பயன் பெற்றனர்.
 நிகழாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 14-ஆவது நிதி உதவித் தொகை, நாடு முழுவதும் 9.54 கோடி பேருக்கு வழங்கப்பட்டது. இந்த வகையில் தமிழகத்தில் 20.95 லட்சம் பேர் 14-ஆவது தவணைத் தொகையைப் பெற்றனர்.
 பயனாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து ஆய்வு
 இந்த நிலையில், தகுதியான பயனாளிகளை பட்டியலில் சேர்க்கவும், தகுதியில்லாதவர்களை நீக்கவும் மாநில அரசுகளுடன், மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 2024 -இல் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தில் தகுதியான பயனாளிகள் அனைவரையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அளவில் வாரம் தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 இதேபோல, மாவட்ட அளவில் நாள்தோறும் ஆய்வு நடத்தப்படுகிறது.
 இதுதொடர்பாக வேளாண்மைத் துறை அலுவலர்கள் கூறியதாவது:
 கடந்த முறை 14-ஆவது தவணைத் தொகை வழங்குவதற்கும் இ-கேஒய்சி பதிவு கட்டாயமாக்கப்பட்டது. ஆனாலும், கடைசி நேரத்தில் இந்த விதிமுறை தளர்த்தப்பட்டு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகள் அனைவருக்கும் உதவித் தொகை விடுவிக்கப்பட்டது. இதனால், இ-கேஒய்சியில் பதிவு செய்யாத விவசாயிகள் மீண்டும் அலட்சியமாக உள்ளனர். 15-ஆவது தவணைத் தொகையைப் பொருத்தவரை, தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால், இ-கேஒய்சி பதிவுகள் 100 சதவீதம் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்றனர்.
 கேரள பயனாளிகள் அதிகம்
 கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் 14-ஆவது தவணைத் தொகை தமிழகத்தில் 20.95 லட்சம் பயனாளிகளுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால், தமிழகத்தைவிட பரப்பளவில் 30 சதவீதம், மக்கள் தொகையில் 45 சதவீதம் குறைவாகக் கொண்ட மாநிலமான கேரளத்தில் 23.40 லட்சம் பயனாளிகள் நிதி உதவி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 கேரள மாநிலத்தில் பயனாளிகள் தங்களது விவரங்களை சுயமாகவே இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுகின்றனர். ஆனால், தமிழகத்தில் இந்த விகிதம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com