அரசியல் அழுத்தம் காரணமாகவே திமுக நிர்வாகி கைது: அண்ணாமலை

அரசியல் அழுத்தம் காரணமாகவே நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்  என்று நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசியல் அழுத்தம் காரணமாகவே நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்  என்று நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜெகன் கடந்த 30ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதே மூளிக் குளத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரபுவை கைது செய்யக்கோரியும், உறவினர்கள் உடலை வாங்க மறுத்தும் 5 நாளாக போராடிய நிலையில் நேற்று திமுக பிரமுகர் பிரபு காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இதையடுத்து, இன்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெகனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். முன்னதாக நெல்லை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மருத்துவமனையில் வைத்து ஜெகன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ஜெகனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். 

அதை தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜெகன் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டதில் முக்கிய குற்றவாளியான திமுக சேர்மனின் கணவரை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என்று போராடினோம். ஐந்து நாள் போராட்டத்துக்கு பிறகு திமுக பிரமுகர் சரண் அடைந்துள்ளார். அப்பகுதியில் அவர் பாஜகவை வளரத்தார் என்ற ஒரே காரணத்துக்காக கூலிப்படையை வைத்து ஜெகனை கொலை செய்துள்ளனர். 

திமுக பிரமுகர் மீது ஏற்கனவே 16 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 96 வழக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள். அவரது தாய்க்கு வீடு கட்டி கொடுப்பதாக உறுதி கொடுத்துள்ளேன்.  அது பாஜக கடமை.  பல்லடத்தில் பாஜக கிளை தலைவர் மோகன்ராஜா படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரே வீட்டில் நான்கு பேர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். 

வீட்டு முன் மது அருந்த வேண்டாமென கூறியதால் நான்கு பேரும் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். எந்தளவுக்கு தமிழகத்தில் கூலிப்படை  வன்முறை கலாசாரம் தலைதூக்கியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை கொலைகள் நடந்துள்ளது. குடி மற்றும் கஞ்சா பழக்கம் அதிகமாகி விட்டது. திமுக பிரமுகர் பிரபு மீது 16 கொலை வழக்கு இருக்கிறது என்றால், அந்த தைரியம் எங்கே இருந்து வருகிறது. 

பல்லடத்தில் 4 பேரை துண்டு துண்டாக வெட்ட எங்கிருந்து தைரியம் வந்தது. தென் தமிழகத்தில் வன்முறையை தடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஒரே காவல்துறை பல வேலையை செய்கின்றனர். எனவே சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம் என காவல்துறையை இரண்டாக பிரிக்க வேண்டும். 

அரசியல் அழுத்தம் காரணமாகவே குற்றவாளி தப்பித்து வந்தனர். காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். அதே அரசியல் அழுத்தம் காரணமாக தற்போது குற்றவாளி கைதாகியுள்ளார். இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. 

நெல்லையில் தனியார் சேனல் ஒளிப்பதிவாளர் சங்கர், சந்திராயன் 3 தொடர்பான செய்தி சேகரிக்க சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குழந்தைக்கு தேவையான கல்வி உதவி செய்ய பாஜக தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com