காவிரி நீர் கோரி செப். 20-ல் டெல்டா மாவட்டங்களில் தொடர் முழக்கப் போராட்டம்

தமிழகத்துக்கான காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள்.

தஞ்சாவூர்: தமிழகத்துக்கான காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத்தின் கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு விவசாய சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலத் தலைவர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

காவிரியில் தண்ணீர் வராத நிலையில், டெல்டா மாவட்டங்களில் நிலவும் நிலைமைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரியில் தண்ணீர் வராததால் ஏற்கெனவே குறுவை சாகுபடியில் பல லட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன. இதனால் விவசாயிகள் கை முதலை இழந்து தவித்து வருகின்றனர். 

இத்தகைய நிலையில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வருமா? வராதா? என்கிற மிகப்பெரிய குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனால் சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதற்கு விவசாயிகள் தயங்குகின்றனர். எனவே சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விவசாயிகளுக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடக அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே காவிரியில் தமிழகத்துக்கு மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என அங்குள்ள ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும், பல்வேறு விவசாய அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம், மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து வற்புறுத்தியது, காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகியது எனப் படிப்படியாக முயற்சித்து, தண்ணீர் கிடைக்காத நிலையில் இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்காமல், செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயமானது கிடையாது. இன்னும் 15 நாள் கழித்துதான் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றால், தண்ணீர் எப்போது வரும் என்கிற கேள்விக்குறி எழுகிறது. எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக்கொண்டு உடனடியாக விசாரிக்க வேண்டும்.

குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு தலா ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் தமிழகத்துக்கு மாத வாரியாக தண்ணீர் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை தமிழகத்துக்குரிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்தால், அம்மாநிலத்தில் உள்ள அணைகளைக் காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது முதல் கட்ட போராட்டம். செப்டம்பர் 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையைப் பொருத்து, அடுத்த கட்டப் போராட்டத்தை தீவிரமாக நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் சண்முகம்.

இக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலர்கள் பி.எஸ். மாசிலாமணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு), சாமி. நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு), காவிரி டெல்டா பாசனதாரர்கள் கூட்டமைப்புத் தலைவர் கே.வி. இளங்கீரன், விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநிலத் துணைச் செயலர் சு. பாலசிங்கம், மக்கள் அதிகாரம் காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com