கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

மஞ்சள் அழுகல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

மஞ்சள் அழுகல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு, விவசாய உற்பத்தியில் புரட்சி செய்ததாக மார்தட்டிக் கொள்ளும் வேளாண்மைத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கடலூரில் இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்ட நிலையில், மஞ்சள் அழுகல் நோய் போன்ற நோய்கள் தாக்கியும், மற்றும் காட்டுப் பன்றிகளின் தொல்லையாலும், சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் விளைந்த கரும்பு பயிர்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும், இதனால் கடன் வாங்கி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் முழு நஷ்டம் அடைந்துள்ளதாகவும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் அருகிலுள்ள வேளாண் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், பயிரிட்ட கரும்புகளை நோய்களில் இருந்து காப்பாற்றுவதற்குத் தேவையான பூச்சிக் கொல்லி மருந்துகளை வழங்காமலும், காட்டுப் பன்றிகளிடமிருந்து கரும்புகளை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காமலும், திமுக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக, கடலூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் வியர்வை சிந்தி, கடன் வாங்கி, தாங்கள் பார்த்து பார்த்து வளர்த்த கரும்பு பயிர், நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நோய் கரும்பு சாகுபடி செய்த அருகிலுள்ள மற்ற நிலங்களிலும் பரவக்கூடாது என்ற நோக்கத்தில், கடும் மன வேதனையுடன், கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட கரும்பு பயிர்களை, விவசாயிகளே டிராக்டர் கொண்டு உழுது அழித்து வருகின்றனர் என்ற செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

எனவே, உடனடியாக தமிழகம் முழுவதும் மஞ்சள் அழுகல் நோய் மற்றும் வேர் புழு நோய் போன்ற நோய்கள் தாக்கி, பாதிக்கப்பட்ட கரும்பு விளை நிலங்களை வேளாண்மைத் துறை அமைச்சரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நேரடியாக பார்வையிட வேண்டும். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்வதற்கு உற்பத்திச் செலவாக சுமார் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் விவசாயிகள் தங்கள் உடல் உழைப்பைத் தருகின்றனர். மேலும், கரும்பு விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்திருந்தாலும், இந்நோய் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வராததால், இந்நோயால் பாதிப்படைந்த கரும்பிற்கு இழப்பீடு தர முடியாது என்று காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்கின்றன. எனவே, காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

கரும்பு சாகுபடி செய்துள்ள நிலப் பரப்பில் மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் போன்ற நோய்கள் தாக்கியும் மற்றும் காட்டுப் பன்றிகளின் தொல்லையாலும் தமிழகம் முழுவதும் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பளவில் கரும்பு பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன.

எனவே, திமுக அரசின் வேளாண்மைத் துறை அமைச்சர், தமிழகம் முழுவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி வைத்து, கரும்பு சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கணக்கெடுத்து, ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்; கரும்பு சாகுபடி விவசாயிகளுக்குத் தேவையான பூச்சி மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்; காட்டுப் பன்றி தாக்குதலில் இருந்து பயிரிடப்பட்டுள்ள கரும்புகளைக் காப்பாற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com