காவிரி விவகாரம்: மத்திய அரசை கண்டித்து செப். 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் - பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்
கூட்டத்தில் பேசிய பி.ஆர்.  பாண்டியன்.
கூட்டத்தில் பேசிய பி.ஆர்.  பாண்டியன்.

தஞ்சாவூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன்.

தஞ்சாவூரில் இந்த சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் தெரிவித்ததாவது:

காவிரி டெல்டா மிகப் பெரிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. மேட்டூர் அணை தண்ணீர் இருப்பை நம்பி குறுவை சாகுபடி தொடங்கப்பட்டது. ஆனால் குறுவையை முழுமையாகப் பாதுகாக்க முடியாத வகையில் 3.50 லட்சம் ஏக்கரில் கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர். இதேபோல 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி தொடங்க முடியாமல் வயல்வெளிகள் வறண்டு கிடக்கின்றன.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில், கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டாலும் போதுமான அளவில் விடவில்லை. மேலும் காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரைக் கணக்கிட்டு, கர்நாடக அணைகளில் உள்ள நீரை நேரில் ஆய்வு செய்து, பற்றாக்குறை கால அளவின் அடிப்படையில் பெற்றுத் தர ஆணையம் மறுத்துவிட்டது. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக சதி திட்டத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஆணையத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்கிறது. மத்திய அரசின் துரோகம் தமிழ்நாட்டுக்கு எதிராக காவிரி பிரச்னையில் தமிழக விவசாயிகளை அழிக்கும் நோக்கோடு அரசியல் சுயலாபத்துக்காகச் செயல்படுகிறது.

மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தியது. மத்திய அரசும், கர்நாடக அரசும் கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக நாடகத்தை நடத்தி வருகிறது. எனவே, மத்திய அரசின் துரோகத்தை எதிர்கொள்ளும் நிலையில் தமிழ்நாட்டுக் காவிரி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதை அனுமதித்தால் பெற்ற உரிமை பறிபோய்விடும். 

உச்ச நீதிமன்ற வழக்குத் தீர்ப்பும் தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. இதனால் தமிழ்நாடு சம்பாவையும் இழக்கப் போகிற பேராபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அரிசி உற்பத்தியை இழக்கும் நிலை உருவாகியுள்ளதால், உணவு தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. எனவே தமிழ்நாடு அரசு உள்பட அனைத்து கட்சிகளும் போராடுவதற்கு  காவிரி டெல்டாவுக்கு முன் வரவேண்டும். 

கருகும் குறுவை பயிரைக் காப்பாற்றவும், சம்பா சாகுபடிப் பணியைத் தொடங்க முடியாத நிலையை முடிவுக்குக் கொண்டு வரவும், உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 21 ஆம் தேதி வழங்கவுள்ள தீர்ப்பு கர்நாடகத்திடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் பெற்றுத் தரும் வகையில் இருக்கவும் வலியுறுத்தி வருகிற 19 ஆம் தேதி முதல் கட்டமாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், அனைத்து அமைப்புகள் அரசு ஆதரவோடு முழு அடைப்பு போராட்டத்தை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடத்தவுள்ளோம். இதற்கு அனைத்து கட்சிகள் தமிழக முதல்வர் ஆதரவு தர முன்வர வேண்டும் என்றார் பாண்டியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com