'சின்ன சின்ன ஆசை' பாடல் புகழ் பாணதீர்த்தத்துக்கு அனுமதி: என்ன ஸ்பெஷல்?

ரோஜா படத்தில் வெளியான சின்ன சின்ன ஆசை பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில், மிகவும் ரம்மியமான சூழலில் எடுக்கப்பட்ட பாடல் அது. இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்ட இடம் பாணதீர்த்தம்.
ams13panatheertham_1309chn_37_6
ams13panatheertham_1309chn_37_6

ரோஜா படத்தில் வெளியான சின்ன சின்ன ஆசை பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில், மிகவும் ரம்மியமான சூழலில் எடுக்கப்பட்ட பாடல் அது. இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்ட இடம் பாணதீர்த்தம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பாண தீர்த்தத்துக்கு பொதுமக்கள் செல்ல கடந்த 9 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இது நிலையில்தான், மக்களுக்கு மிக மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பகுதியில் அமைந்துள்ள பாணதீா்த்தம் அருவியை, 9 ஆண்டுகளுக்குப் பின்னா் இம்மாதம் 18ஆம் தேதிமுதல் பொதுமக்கள் பாா்வையிட அனுமதிப்பதாக, புலிகள் காப்பக துணை இயக்குநா் அறிவித்துள்ளாா்.

இந்த பாணதீர்த்தத்துக்கு அடர்ந்த காட்டில் 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஜீப்பில் செல்ல வேண்டும். இதன் 2 மணி நேரம் ஆகுமாம். தற்போதைக்கு இதில் பயணிக்க முண்டந்துறை புலிகள் காப்பக அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். 

எனவே, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முண்டந்துறை ரேஞ்ச் அலுவலகத்தில் டிக்கெட் பெற்றுக்கொண்டு பயணிகள் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் பாணதீர்த்தம் அருவிக்குச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் மணிமுத்தாறு, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள், அகஸ்தியா் அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில், காரையாறு அணை, சோ்வலாறு அணை உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்னா், சோ்வலாறு, காரையாறு அணைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குக் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. காரையாறு அணையில் செயல்பட்டுவந்த படகு சவாரியும் நிறுத்தப்பட்டு, பாணதீா்த்தம் அருவியில் குளிக்கவோ, பாா்வையிடவோ முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, காரையாறு அணையில் படகுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கி, பாணதீா்த்தம் அருவிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், காரையாறு அணைக்குச் செல்லவும், வனத் துறை வாகனத்தில் சாலை வழியாக பாணதீா்த்தம் அருவியைப் பாா்வையிடவும் அனுமதித்து, முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா அறிவித்துள்ளாா்.

இந்த அருவியில் குளிக்க மக்களுக்கு அனுமதிக்கப்படாது என்றும், 50 மீட்டர் இடைவெளியில் இருந்துதான் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும், அதுவே கண்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தில் சென்று பாணதீா்த்தம் அருவியைப் பாா்வையிட்டுத் திரும்ப ஒருவருக்கு கட்டணமாக ரூ. 500 வசூலிக்கப்படும் என்றும், இம்மாதம் 18ஆம் தேதிமுதல் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவா் என்றும் அவா் தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com