முன்பதிவு தொடங்கியது: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் கட்டணங்கள் முழு விவரம்!

திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப். 24) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறாா். இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமாக சென்னை- திருநெல்வேலி இடையே வியாழக்கிழமையும், திருநெல்வேலி- சென்னை இடையே வெள்ளிக்கிழமையும் இயக்கப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.50 மணியளவில் சென்னை எழும்பூா் வந்தடைந்தது. தொடா்ந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி சென்றது.

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையிலான தொடக்க சேவை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ள நிலையில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நயினாா் நாகேந்திரன், எம். அப்துல் வஹாப், நெல்லை மேயா் பி.எம். சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

கால அட்டவணை: தொடக்க சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாலும் பயணிகள் சேவை திங்கள்கிழமைமுதல் தொடங்கப்படவுள்ளது. இதன் முதல் பயணிகள் சேவையாக சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (எண் 20665) தாம்பரத்துக்கு பிற்பகல் 3.13 மணிக்கும், விழுப்புரத்துக்கு மாலை 4.39 மணிக்கும், திருச்சிக்கு மாலை 6.40 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு இரவு 7.56 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கும், விருதுநகருக்கு இரவு 9.13 மணிக்கும் திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கும் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து வந்தே பாரத் ரயில் பயணிகள் சேவை புதன்கிழமை தொடங்கப்படவுள்ளது (செவ்வாய்க்கிழமை ரயில் சேவை கிடையாது). திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 20666) விருதுநகருக்கு காலை 7.13 மணிக்கும், மதுரைக்கு காலை 7.50 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு காலை 8.40 மணிக்கும், திருச்சிக்கு காலை 9.50 மணிக்கும், விழுப்புரத்துக்கு காலை 11.54 மணிக்கும், தாம்பரத்துக்கு பகல் 1.13 மணிக்கும், சென்னை எழும்பூருக்கு பகல் 1.50 மணிக்கும் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டணம்: வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு இன்று(செப்.23) நிலையில் சென்னை - திருநெல்வேலி இடையிலான உத்தேச பயணக் கட்டணம் வெளியாகியுள்ளது. இதில் இருக்கை வசதி கொண்ட குளிா்சாதன பெட்டியில் (ஏசி சோ் காா்) பயணக் கட்டணமாக ரூ.1,155, முன்பதிவுக் கட்டணம் ரூ.40, அதிவேக ரயிலுக்கான கட்டணம் ரூ.45, உணவு மற்றும் சிற்றுண்டிக்கு ரூ.308, ஜிஎஸ்டி வரி ரூ.62 என மொத்தமாக ரூ.1,610 வசூலிக்கப்படும்.

சொகுசு பெட்டியில் (எக்ஸிகியூட்டிவ் சோ் காா்) பயணக் கட்டணமாக ரூ.2,375, முன்பதிவுக் கட்டணம் ரூ.60, அதிவேக ரயிலுக்கான கட்டணம் ரூ.75, உணவு மற்றும் சிற்றுண்டிக்கு ரூ.369, ஜிஎஸ்டி வரி ரூ.126 என மொத்தமாக ரூ.3,005 வசூலிக்கப்படும்.

முன்பதிவின் போது உணவு வேண்டாம் எனத் தெரிவிக்கும் பயணிகளுக்கு பயணக் கட்டணம் மற்றும் இதர கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும்.

கட்டணம் எவ்வளவு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com