பாஜக - அதிமுக கூட்டணி பிரிவை பொறுத்திருந்து பார்ப்போம்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

பாஜக - அதிமுக கூட்டணி பிரிவை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்


தஞ்சாவூர்: பாஜக - அதிமுக கூட்டணி பிரிவை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

காவிரி நீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் புதன்கிழமை காலை முதல் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

பாஜகவும் அதிமுகவும் பிரிந்து 2 நாட்களே ஆவதால் அதனை பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் கிடையாது. இரு கட்சிகளுக்கு இடையே பிரச்னை கிடையாது. இரு தலைவர்களுக்கு இடையேதான் பிரச்னை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். கூட்டணி தொடர்பான விஷயத்தில் தேமுதிக உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும்.

காவிரி பிரச்னை 50 ஆண்டுகளாக நிலவி வந்தாலும், இதுவரை எந்த தீர்வு கிடைக்கவில்லை. எத்தனையோ பிரதமர்கள், முதல்வர்கள் வந்தாலும் ஆட்சி மாறியதே தவிர, காட்சி மாறவில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று, பிரதமரை சந்திக்க வைத்து காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் பயிர் வாடியதைக் கண்டு மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். அவரது மகளின் கல்விச் செலவுக்கு நிதி உதவியும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தேமுதிக சார்பில் புதன்கிழமை காலை முதல் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com