பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்(98) வயதுமூப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலை 11.20 மணிக்கு காலமானார். 
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

சென்னை: பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்(98) வயதுமூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை காலை 11.20 மணிக்கு காலமானார். 

வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கும்பகோணம் டாக்டர் எம்.கே சாம்பசிவன் அறுவை சிகிச்சை நிபுணர் - பார்வதி தங்கம்மாள்  தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்த எம்.எஸ். சுவாமிநாதன், விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். விவசாய அறிவியலில் அவருக்கு இருந்த தீவிர ஆர்வம் மற்றும் சுதந்திர இயக்கத்தில் அவரது தந்தையின் பங்கேற்பு மற்றும் மகாத்மா காந்தியின் செல்வாக்கு அவரை பாடத்தில் உயர் படிப்பைத் தொடர தூண்டியது. பின்னர்,  கோயம்புத்தூரில் உள்ள வேளாண் கல்லூரியில் (தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்) வேளாண் அறிவியல் மற்றும் மரபியலில் இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்றவர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். 

டாக்டர் சுவாமிநாதன், இந்தியாவின் பல முன்னாள் பிரதமர்களுடனும், மாநிலத்
தலைவர்களுடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றிய ‘பசுமைப் புரட்சி’யின் வெற்றிக்காக, உணவு உற்பத்தியில் குவாண்டம் முன்னேற்றத்துக்கும், “பசியில்லா இந்தியாவுக்கும் வழி வகுத்தது. நிலையான விவசாயத்திற்கான அவரது வாதங்கள் அவரை நிலையான உணவுப் பாதுகாப்புத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட உலகத் தலைவராக்குகிறது.

'பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு' என்று அடிக்கடி கூறிவந்த எம்.எஸ்.சுவாமிநாதன், உயர் விளைச்சல் தரும் கோதுமை வகைகளை உருவாக்குவதில் பிரபல அமெரிக்க பண்ணை விஞ்ஞானியும் 1970 நோபல் பரிசு பெற்றவருமான நார்மன் போர்லாக் உடன் நெருக்கமாக பணியாற்றினார்.

இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களிலும் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர், சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். 

மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர். வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்தார். 

1960 இல் நாட்டில் பசுமைப் புரட்சி தொடங்கிய நேரத்தில், பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். அரிசி தட்டுப்பாட்டை நீக்க நவீன அறிவியல் முறைகளை கண்டறிந்து அதிக மகசூல் தரும் விதைகள், இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணை கருவிகள், நீர்பாசன முறைகள், களைக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் போன்ற புதுமைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் விவசாயம் ஒரு நவீன தொழில்துறை அமைப்பாக மாற்றி அமைத்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். 

பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கியவர். இந்தியாவுக்கு பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர். 

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக எம்.எஸ். சுவாமிநாதன் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசண் ஆகிய விருது, எஸ்எஸ் பட்நாகர் உள்ளிட்ட விருதுகளையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ஆசியாவின் நோபல் விருதான மகசேசே விருது, உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளையும், உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கியுள்ளன.

இருபதாம் நூற்றாண்டில் மிகப் பெரும் தாக்கம் செலுத்திய ஆசிய ஆளுமைகள் என உலகப் புகழ் பெற்ற டைம் இதழ் வெளியிட்ட பட்டியலில் மகாத்மா காந்தி,ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் இடம்பெற்ற இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியின் மூலம் தாவர மரபியல் நிபுணரும், சென்னையிலுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவரும், தலைமை ஆலோசகருமான எம்.எஸ்.சுவாமிநாதன் நீண்டகாலமாக நிலையான வேளாண்மையின் ஆலோசகராக இருந்து வருகிறார். 

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சௌமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன் மற்றும் நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி மீனா சுவாமிநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com