எம். எஸ். சுவாமிநாதன்: இந்திய பசுமை புரட்சியின் தந்தை!

பசுமைப்புரட்சியின் பக்க விளைவுகளைச் சுட்டிக்காட்டி, சுவாமிநாதனைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. செயற்கை உரப் பயன்பாட்டால் மண் மலடாவதையும்,
எம். எஸ். சுவாமிநாதன்: இந்திய பசுமை புரட்சியின் தந்தை!

1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது.  அதைத் தடுக்க இந்திய அரசு பல தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமானது பசுமைப்புரட்சி.

அதற்கு அடித்தளமிட்டவர், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான பெஞ்சமின் பியாரி பால் (1906- 1989). கோதுமை சாகுபடியில் உயர் விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்கியவர் அவர். 

அவரது அடியொற்றி, உணவு தானிய உற்பத்திப் பெருக்கத்துக்கான திட்டங்கள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது (1966) தீட்டப்பட்டன. அப்போதைய மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியமும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனும் அத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினர்.

உயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்கள், மேம்பட்ட உரப்பயன்பாடு, முறையான நீர்ப்பாசனம், பூச்சிக்கொல்லி மருந்து நிர்வாகம் ஆகிவற்றின் கலவையான இத்திட்டத்தால், 1970-களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, தேவையைவிட அதிகரித்தது. உணவுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலைமை அப்போது மாறியது.

இத்திட்டத்தின் நாயகராக தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருதப்படுகிறார். இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார். 

தமிழகத்தின் கும்பகோணத்தில் மருத்துவர் சாம்பசிவன்- பார்வதி தங்கம்மாள் தம்பதியின் இரண்டாவது மகனாக 1925, ஆகஸ்ட் 7-இல் பிறந்தார் சுவாமிநாதன். மான்கொம்பு சதாசிவன் சுவாமிநாதன் என்பதன் சுருக்கமே எம்.ஸ்.சுவாமிநாதன். 

அவரது தந்தை சாம்பசிவன் மகாத்மா காந்தியால் கவரப்பட்டு அந்நியத் துணி எதிர்ப்பு இயக்கத்திலும் ஹரிஜன ஆலயப் பிரவேசப் போராட்டத்திலும் பங்கேற்றவர். கும்பகோணத்தில் அக்காலத்தில் பரவிய யானைக்கால் வியாதியை ஒழித்ததில் பெரும் பங்காற்றியவர் அவர். 

சுவாமிநாதன் 11 வயதாக இருக்கும்போது அவரது தந்தை இறந்தார். அதையடுத்து மாமாவான கதிரியக்க நிபுணர்  எம்.கே.நாராயணசாமியால் வளர்க்கப்பட்டார். 

கும்பகோணம் கத்தோலிக் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் அவர் படித்தார். பிறகு திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் பி.எஸ்சி. முடித்தார் (1944). 

அவரது குடும்பம், சுவாமிநாதன் மருத்துவராக வேண்டும் என்று விரும்பியது. ஆனால், 1943}இல் வங்கப் பஞ்சத்தின் கொடுமைகளை அறிந்த சுவாமிநாதன், நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், விவசாய ஆராய்ச்சியை தனது துறையாகத் தேர்ந்தெடுத்தார்.

பிறகு மெட்ராஸ் வேளாண்மைக் கல்லூரியில் (தற்போதைய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை) சேர்ந்த சுவாமிநாதன், வேளாண்மையில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். அதையடுத்து, தில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) மரபியல், விதைப் பெருக்கவியல் துறையில் முதுநிலை படிப்பு பயின்ற அவர், 1949-இல் உயிரணு மரபியலில் (Cytogenetics) பட்டம் பெற்றார். அப்போது இந்திய குடிமைப்பணித் தேர்வு எழுதி ஐபிஎஸ் பணிக்குத் தேர்வானபோதும், அதில் அவர் சேரவில்லை.

பிறகு ஐஏஆர்ஐ நிறுவனத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியை நெதர்லாந்திலுள்ள வேகனிங்கன் பல்கலைக்கழகத்தில் யுனெஸ்கோ கூட்டுறவுடன் தொடர்ந்தார். அங்கு காட்டுவகை உருளைக்கிழங்குகளிலிருந்து சாகுபடிக்கான வீரிய உருளைக்கிழங்கை (Solanum tuberosum) உருவாக்குவதற்கான மரபியல் படிநிலைகளைத் தரப்படுத்துதலில் வெற்றி பெற்றார். 

1950-இல் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவர விதைப் பெருக்க நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு, 1952-இல் பிஎச்.டி. பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகம் சென்ற சுவாமிநாதன், அங்கு அமெரிக்க வேளாண் துறையில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை நிறுவ உதவி செய்தார்.

அப்போது அமெரிக்காவிலேயே பேராசிரியர் பணி அளிப்பதாக அழைப்பு விடுக்கப்பட்டபோதும், அதை மறுத்து 1954-இல் நாடு திரும்பினார் சுவாமிநாதன். தில்லியிலுள்ள ஐஏஆர்ஐ அவரது புதிய களமானது. 

அங்கு 1954 முதல் 1966 வரை, ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆய்வு நிர்வாகி ஆகிய பொறுப்புகளை வகித்த அவர், 1966 முதல் 1972 வரை அதன் இயக்குநராகப் பணி புரிந்தார். இதனிடையே கட்டாக்கிலுள்ள மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையத்திலும் அவர் 1954 முதல் 1972 வரை கூடுதலாகப் பணியாற்றினார்.

1966-இல் பசுமைப்புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டபோது எம்எஸ்.சுவாமிநாதன் அதில் இடம்பெற்று, திட்டத்தின் வெற்றிக்கு வேளாண் ஆராய்ச்சியைப் பயன்படுத்தினார். அதன் விளைவாக, 1971 முதல் 1977 வரை தேசிய வேளாண் ஆணைய உறுப்பினராகவும், 1972 முதல் 1979 வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கூட்டமைப்பின் (ICAR) தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.

சுவாமிநாதனின் நிர்வாகத் திறமை அவருக்கு பொறுப்பான அரசுப் பதவிகளை வகிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. 1979-80-இல் மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராகவும், 1980-82-இல் மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் அவர் பொறுப்பு வகித்தார். 1981-82-இல் தேசிய உயிரித் தொழில்நுட்ப வாரியத்தின் தலைவராகவும் அவர் இருந்தார். 

உலக அளவிலும் சுவாமிநாதனின் திறமை அங்கீகரிக்கப்படுகிறது. 1981-85-இல் அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைவராகவும், 1982 முதல் 1988 வரை பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தின் (IRRI) தலைமை இயக்குநராகவும் அவர் பொறுப்பேற்றிருந்தார். 1984-90-இல் சர்வதேச இயற்கைவளப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராக அவர் செயல்பட்டார். 

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் (2007-13), தேசிய விவசாயிகள் நல ஆணையத்தின் தலைவராகவும் (2004-06), தேசிய வேளாண் அறிவியல் அகாதெமியின் தலைவராகவும் (1991-96, 2005-07) அவர் இருந்துள்ளார். 

பசுமைப்புரட்சியின் பக்க விளைவுகளைச் சுட்டிக்காட்டி, சுவாமிநாதனைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. செயற்கை உரப் பயன்பாட்டால் மண் மலடாவதையும், மரபணு மாற்றப் பயிரினங்களால் உள்நாட்டு விதைகள் அழிவதையும் எதிர்ப்போர், சுவாமிநாதனைக் குற்றம் சாட்டுகின்றனர். 

பல்வேறு அரசுக் குழுக்களில் நிர்வாகியாகவும் பல கல்வி நிறுவனங்களின் உறுப்பினராகவும் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் 70 கெüரவ முனைவர் பட்டங்களை அளித்துள்ளன. 

ராமன் மகசேசே விருது (1971), உலக உணவு பரிசு (1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது (2013), இந்திய அரசின் பத்மஸ்ரீ (1967), பத்மபூஷண் (1972), பத்மவிபூஷண் (1989) உள்ளிட்ட  40-க்கு மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுள்ளார். சென்னையில் அவர் நிறுவிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனம், நீடித்த வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com