வாச்சாத்தி வழக்கு: 215 பேருக்கும் தண்டனை உறுதி; 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம்

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றம், 215 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றம், 215 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது; மேலும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி கிராமம்; இங்கு நிகழ்ந்த வன்முறை, பாலியல் வன்கொடுமை வழக்கில் 215 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அவற்றைத் தள்ளுபடி செய்ததுடன் தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உறுதி செய்வதாகக் கூறினாா். மேலும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தீா்ப்பு விவரம்: குற்றம் சாட்டப்பட்டவா்களின் குற்றச் செயல்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராமத்தில் மேம்பாட்டு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த கிராமத்தை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து...: வாச்சாத்தி கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து பெற வேண்டும்.

அரசுப்பணி அல்லது தொழிற்பயிற்சி: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; எனவே, சிகிச்சை அளிக்கத் தவறியவா்களிடமிருந்தும் இழப்பீட்டுத் தொகை பெறப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவா்கள் அல்லது அவா்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; அதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், சுய தொழில்களுக்கு பயிற்சிகள் வழங்க வேண்டும்.

வாச்சாத்தி சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைத்து நபா்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், வனத்துறை அதிகாரி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஏற்கெனவே சிறைத் தண்டனை அனுபவித்திருந்தால் அதற்கேற்ப மீதமுள்ள காலத்துக்கும் தண்டனை அனுபவிக்க வகை செய்ய வேண்டும் எனத் தீா்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com