
கோப்புப் படம்
உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில்,
தமிழகம் முழுவதும் தற்போது எக்ஸ்பிபி 1.16 மற்றும் பி.ஏ.-2 வகை கரோனா தொற்றுகள் வேகமாகப் பரவி வருகின்றன. பொதுச் சுகாதாரத் துறை தகவல்படி, கடந்த நான்கு வாரங்களில் மட்டும் கரோனா தினசரி பாதிப்பு விகிதம் எட்டு மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 521 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. கரோனா நேர்மறை விகிதம் 8.6 சதவீதமாக இருப்பதால், மாநில பொதுச் சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3.330 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 140, கோயம்புத்தூரில் 45, கன்னியாகுமரியில் 44, திருச்சியில் 31 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மேலும், பத்து மாவட்டங்களில் 10 முதல் 25 வரையிலான புதிய வழக்குகளும், மற்ற 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்திலும் பதிவாகியுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 150 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 70 பேர் ஆக்ஸிஜன் சிகிச்சையிலும், 77 பேர் சாதாரண வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.