12 மணி நேர தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

12 மணி நேர தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

12 மணி நேர தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிகள் வெளிநடப்பு செய்தன.  எனினும் கடும் எதிர்ப்புக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா பேரவையில் ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நாளை மறுநாள் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்துகிறது. 

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம்‌ என்பதை நூறாண்டுகளுக்கும்‌ மேலாக தொழிலாளர்கள்‌ தங்களது அடிப்படை உரிமையாக கடைபிடித்து வருகிறார்கள்‌. கடந்த 2020-ஆம்‌ ஆண்டில்‌ மத்திய அரசு தொழிலாளர்‌ வேலை சட்டத்தில்‌ ஒரு திருத்தம்‌ கொண்டு வந்தது. வாரத்தில்‌ 4 நாட்கள்‌ குறைந்தபட்சம்‌ 48 மணி நேர வேலை, 3 நாட்கள்‌ விடுமுறை என்பது அந்தச்‌ சட்டத்தின்‌ ஷரத்து. தகவல்‌ தொழில்நுட்ப துறைகளிலெல்லாம்‌ 8 மணி நேரத்திற்கு மேல்‌ வேலை வாங்குவதாலும்‌, உரிய சம்பளம்‌ தராமல்‌ இருப்பதாலும்‌ பணியாளர்களின்‌ உரிமையை நிலைநாட்ட இந்தச்‌ சட்டம்‌ கொண்டு வருவதாகவும்‌ தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில அரசும்‌ அவர்களின்‌ விருப்பத்திற்கேற்ப இந்தச்‌ சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்‌ என்றும்‌ தெரிவித்திருந்தது. அப்போது, எதிர்க்கட்சித்‌ தலைவராக இருந்த தற்போதைய முதல்வர்‌ ஸ்டாலின்‌ இந்தச்‌ சட்டத்தை எதிர்த்துப் பேசினார்‌. 

பா.ஜ.க ஆளும்‌ மாநிலங்களைப்‌ போல்‌ மத்திய அரசுக்கு தலையாட்டாமல்‌ தமிழகத்தில்‌ இந்தச்‌ சட்டத்தை நிராகரிக்க வேண்டும்‌ என்று, எனது தலைமையிலான ஜெயலலிதாவின்‌ அரசுக்கு கெடு விதித்தார்‌. அன்று ஸ்டாலின்‌ வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்துப்‌ பார்க்க வேண்டும்‌. தமிழக மக்களின்‌ நலனுக்காகவும்‌, தமிழக மக்களின்‌ தேவையை பூர்த்தி செய்யவும்‌, ஜெயலலிதாவின்‌ அரசால்‌ மத்திய அரசுக்கு கடிதங்கள்‌ எழுதப்படும்‌ போதெல்லாம்‌ எங்களைப்‌ பார்த்து கேலி பேசிய அப்போதைய எதிர்க்கட்சித்‌ தலைவர்‌, தற்போதைய திமுக அரசின்‌ முதல்வர்‌, 21.4.2023 அன்று தமிழக தொழிலாளர்களின்‌ வயிற்றில்‌ அடிக்கும்‌ விதமாக, 12 மணி நேர கட்டாய வேலை திருத்தச்‌ சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில்‌ ஒருதலைபட்சமாக நிறைவேற்றியதை அ.தி.மு.க சார்பில்‌ வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌.

தி.மு.க அரசு செய்யும்‌ அனைத்து செயல்களுக்கும்‌ தலையாட்டும்‌ அதன்‌ கூட்டணிக்‌ கட்சிகளே, இந்த சட்டத்தை எதிர்த்துப்‌ பேரவையில்‌ இருந்து வெளிநடப்பு செய்திருப்பது, இந்த அரசின்‌ தொழிலாளர்‌ விரோதப்‌ போக்கை வெளிச்சம்‌ போட்டுக்‌ காட்டுகிறது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர்‌ விரோத சட்டத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப்‌ பெற வேண்டும்‌. இல்லையெனில்‌, தமிழக தொழிலாளர்களின் நலனைக்‌ காக்க அ.தி.மு.க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும்‌ என்று எச்சரிக்கிறேன்‌. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com