வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் எலக்ட்ரோபதி கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகே கம்பளியம்பட்டி சாலையில் ஸ்ரீ செல்வநாயகி எலக்ட்ரோபதி மருத்துவக் கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் நான்கரை ஆண்டு பி.இ.எம்.எஸ், 2 ஆண்டு எம்.டி, லேப் டெக்னீசியன், செவிலியர் துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. தற்போது 60 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிறுவனம் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினீத்துக்குப் புகார் சென்றுள்ளது.
இதையடுத்து மாவட்ட மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குநர் கனகராணி தலைமையில் வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கல்வி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
நிறுவனத் தலைவர் தரண்யா, முதல்வர் பாலசுப்பிரமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் மருத்துவமனை செயல்பாட்டுக்கான சான்றிதழ் போலி எனத் தெரிய வந்ததால் மருத்துவமனை, கல்வி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனை செயல்பட நீதிமன்ற உத்தரவு உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் தங்களுடைய நடவடிக்கைகளைக் கைவிட்டு கல்வி நிறுவனம், மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.