
சென்னை: கிராமப்புற அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் முதல்முறையாக விமானம் மூலம் சென்னைக்கு மூன்று நாள்கள் கல்விச் சுற்றுலா வந்துள்ளனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் ஒருங்கிணைப்பில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் காங்கயம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 20 கிராமப்புற அரசு பள்ளி குழந்தைகளை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் சென்னைக்கு வந்தனர்.
அதேபோல், திருப்பூரின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து அரசுப் பள்ளிகளை சேர்ந்த மேலும் 40 குழந்தைகளையும் ரயில் மூலம் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இவர்கள் 60 பேரும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் உள்ள பல்வேறு சுற்றுலாப் பகுதிகளை மூன்று நாள்கள் சுற்றிப் பார்கின்றனர்.
முதல் நாளான இன்று வேடந்தாங்கல், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்த பிறகு இரவு 7 மணியளவில் கல்பாக்கம் அணு உலை விஞ்ஞானி டாக்டர்.என்.சூர்யமூர்த்தி மற்றும் இந்திய கணிதவியல் நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் டி.கோவிந்தராஜன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.
தொடர்ந்து, நாளை காலை பேருந்து மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தரவுள்ளனர். பிறகு பிற்பகல் 2 மணியளவில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்கவுள்ளனர்.
திங்கள்கிழமை காலை மெட்ரோ ரயிலை சுற்றிப் பார்த்து அதில் பயணிக்கின்றனர். எழும்பூர் கன்னிமாரா நூலகம், அருங்காட்சியத்தை சுற்றிப் பார்த்த பிறகு பிற்பகல் 2 மணியளவில் ரயில் மூலம் திருப்பூருக்கு திரும்புகின்றனர்.