
திண்டுக்கல்: வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றியச் செயலராக வீரா எஸ்.டி.சாமிநாதன் பொறுப்பு வகித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணிக்கு மிக நெருக்கமானவராக கருதப்படும் வீரா சாமிநாதனுக்கு சொந்தமான வீடு வேடசந்தூர் கொங்குநகரில் அமைந்துள்ளது.
மேலும், வேடசந்தூர் கோவிலூர் சாலையிலுள்ள் வெரியம்பட்டி பகுதியிலும் தோட்டத்துடன் கூடிய பங்களா உள்ளது. பழனி அடுத்துள்ள புஷ்பத்தூரில் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி நடத்தி வருகிறார். மேலும் சென்னையில் பல்வேறு தொழில்களையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சாமிநாதனுக்கு சொந்தமான வெரியம்பட்டி பங்களா, கொங்கு நகர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
வெரியம்பட்டி பங்களாவுக்கு 2 கார்களில் புதன்கிழமை நண்பகல் 12 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். கொங்குநகரிலுள்ள வீட்டுக்கு பிற்பகல் 2 மணி அளவில் ஒரு காரில் வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
அமைச்சர் செந்தில்பாலாஜி பின்னணி:
அமலாக்கத் துறையினர் விசாரணை வளையத்தில் சிக்கி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பணம் வசூலித்து கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் அமலாக்கத் துறையினர் சாமிநாதன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் பணம் வசூலித்து, அதனை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுக்கும் பணியில் சாமிநாதன் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் தான் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.