கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது!

கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீர் வியாழக்கிழமை மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது!

மேட்டூர்: கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீர் வியாழக்கிழமை மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி,  தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்காத காரணத்தால் அன்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்திலிருந்து தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து உரிய நீரைத் திறந்துவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. 

இதையடுத்து, கர்நாடக அரசு கடந்த 10 நாள்களாக தமிழகத்துக்கு தினசரி வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. கடந்த 2 நாள்களாக கர்நாடக அணைகளில் இருந்து நீர்த்திறப்பு வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. வரை தண்ணீர் வழங்கத் தயார் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீர் வியாழக்கிழமை காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது. 

கர்நாடக அணைகளின் நீர் வரத்து காரணமாக வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 552 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,260 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 54.38 அடியிலிருந்து 53.01அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 19.76 டி.எம்.சி ஆக இருந்தது.

நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் கர்நாடகம் தமிழகத்துக்கு 62 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 18 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது. அதில் மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை நீரும் அடக்கம்.

ஒவ்வொரு முறையும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும்போது காவிரி நீரை பெறுவதற்கு கர்நாடகத்திடம் தமிழகம் போராட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதையும் மதிக்காத கர்நாடகம் காவிரி நீரை வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடகம் முன்வரவில்லை.

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அபரிதமான மழை பெய்து கர்நாடக அணைகளின் பாதுகாப்பு காரணமாக திறக்கப்படும் உபரி நீரை கர்நாடகம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் தமிழகத்திற்கு தண்ணீரைத் தர மறுக்கிறது. 

ஒவ்வொரு முறையும் கர்நாடகம் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதாக கூறும் நீரின் அளவிற்கும் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் நீரின் அளவிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. நடப்பு ஆண்டில் உரிய நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்காவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com