கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல்!

கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில்  பட்டியலின மாணவர் ஹரி பிரசாத் மீது  சக மாணவர்கள் 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல்!
Published on
Updated on
2 min read

கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில்  பட்டியலின மாணவர் ஹரி பிரசாத் மீது  சக மாணவர்கள் 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில்  11 ஆம் வகுப்பு  படித்து வரும் மாணவர்கள் இருவருக்கு இடையே சிறிய பிரச்னைகள் இருந்து வந்துள்ளது.  

இந்நிலையில் அந்தப் பிரச்னைகள் அனைத்தும் சாதி ரீதியான மோதலாக மாறி வியாழக்கிழமை (ஆக.17) பிற்பகல் இருவருக்கும் இடையே பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அதில் ஒருவரின் நண்பரான  11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஹரி பிரசாத் விலக்கி விட்டுள்ளார். 

அப்போது,  பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீ எப்படி எங்கள் விஷயத்தில் தலையிடலாம்  என ஹரி பிரசாத் மீது அந்த இரு மாணவரில் ஒருவர் பிரச்னை செய்து உள்ளார். அதன்பிறகு பள்ளி வேலை நேரம் முடிந்து வழக்கம்போல அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், ஹரி பிரசாத்திடன் பிரச்னை செய்த மாணவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் மோட்டார் பைக்குகளில் மாணவர் ஹரி பிரசாத்தின் சொந்த ஊரான லட்சுமிபுரத்துக்கு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சென்று  ஹரி பிரசாத்தின் வீடு எங்கே உள்ளது என விசாரித்து உள்ளனர்.

இதனிடையே மாணவர் ஹரி பிரசாத் லட்சுமிபுரத்தில் உள்ள கோயில்  திடல் அருகே சென்று கொண்டிருந்ததை பார்த்த அந்த கும்பல் ஹரி பிரசாத்தை சுற்றி வளைத்து சாதியைச் சொல்லித் திட்டி சரமாரியாக தாக்கி காயப்படுத்தி விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்று தலைமறைவாகினர். 

இந்த தகவலை  அறிந்த  மாணவர் ஹரி பிரசாத்தின் பெற்றோர் காயமடைந்த ஹரி பிரசாத்தை உடனடியாக அங்கிருந்து மீட்டு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

மாணவர் ஹரி பிரசாத்துக்கு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நாங்குநேரியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவரும், அவரது தங்கையும் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை போல, அதே மாதிரியான மற்றுமொரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரங்கேறியிருப்பது கல்வித் துறை வட்டாரத்திலும், காவல் துறை வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக கழுகுமலை காவல் நிலைய காவல் துறையினர் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இவ்வழக்கு தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள், 2 பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com