மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயிலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயிலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி


மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னௌவில் இருந்து தென் மாநிலங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐஆர்சிடிசி சுற்றுலா ரயிலில் 180 பயணிகள் கடந்த 17 ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு சனிக்கிழமை அதிகாலை 5.15 மணி அளவில் மதுரை வந்தடைந்தனர்.

இவர்கள் வந்த சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் மதுரை போடி வழித்தடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரயில் பெட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில், ரயிலில் இருந்த பயணிகளில் சிலர் டீ, சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்க முயன்ற போது அந்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

நடைபாதையில் அமர்ந்திருந்த பயணிகள்  தீயை பார்த்து கூச்சலிட, அவசர கதியில் தீயை அணைக்க முயற்சிக்காமல் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கியதால், தீ மளமளவென ரயில் பெட்டி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதில் 60 பேர் கீழே இறங்கி விட்டதாகவும், பெட்டியில் தூங்கிக் கொண்டு இருந்த வயதானவர்கள் கீழே இறங்க இயலாமல் பலியாகி உள்ளனர் என்றும் 4-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 

வெடித்து சிதறிய சிலிண்டர் சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்து காய்கறிகள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து துரிதமாக நடைபெற்று வருகின்றனர்.  

சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள், மருத்துவக் குழுவினர், பாதுகாப்புப் படையினர், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் பார்வையிட்டு, காயம் அடைந்த பயணிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தனர். 

ரயில் பெட்டி தீ விபத்தில் பலியானவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் இதுவரை 5 ஆண்கள், 3 பெண்கள், அடையாளம் தெரியாத ஒருவர் உள்பட 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தீப்பிடித்த ரயில் பெட்டியில் இருந்து தப்பித்து ரயில் பெட்டி தீப்பிடித்து எரிவதை பதற்றதுடன் பார்க்கும் ரயில் பயணிகள்

தீ விபத்து ஏற்பட்டது எப்படி?
ரயில் சுற்றுலா பயணிகள் ரயில் பெட்டிக்குள் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி  சமையல் செய்தபோது, சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தீ விபத்து நடந்த ரயில் பெட்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட சமையல் எரிவாயு உருளை, பாத்திரங்கள், காய்கறிகள் தடையை மீறி ரயிலில் எடுத்து வந்து சமையல் செய்ததால்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும், ரயில் பெட்டியில் வடமாநிலங்களை போல ரயிலில் கொள்ளைர்கள் ஏறிவிடுவார்கள் என்ற அச்சத்தில், பயணிகள் பெட்டியை பூட்டி வைத்ததால், தீ விபத்தின்போது அவர்களால் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி பலியாகி  உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை ரயிலில் கொண்டு செல்ல தடை உள்ளபோது, ஆன்மிக சுற்றுலா சென்ற பயணிகள் தடையை மீறி சிலிண்டரை எடுத்து சென்றது எப்படி?

இதற்கு பாதுகாப்பு குறைபாடு காரணமா? அதிகாரிகளின் அலட்சியமா? என ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்தில் முழுவதும் எரிந்து நாசமான ரயில் பெட்டி

தெற்கு ரயில்வேயின் கூடுதல் மேலாளர் கௌசல் கோசல், ரயில்வே ஐஜி சந்தோஷ் சந்திரன் ஆகியோர் மதுரை விரைந்துள்ளனர். 

தற்போது தீயை அணைக்கும் பணி நிறைவடைந்துள்ளதை அடுத்து தீ விபத்து ஏற்பட்ட பெட்டி மட்டும் தனியாக கொண்டு செல்லப்பட்டு பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

தீ விபத்தின் உச்சபட்ச நிகழ்வாக, ரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்போது, மற்றொரு ரயில் அந்த பகுதியை கடந்து சென்றதை பார்த்தோரின் மனம் பதறியது.  இது எப்படி அனுமதிக்கப்பட்டது என பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

இதுதான் அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com