மதுரையில் தீ விபத்து நிகழ்ந்த ரயில் பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுப்பு! 

மதுரையில் தீ விபத்து நிகழ்ந்த ரயில் பெட்டியில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) நடைபெற்ற சோதனையின் போது இரும்பு பெட்டியில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தீ விபத்து நிகழ்ந்த ரயில் பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுப்பு! 
Published on
Updated on
2 min read


மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் பெட்டியில் தீ விபத்து நேரிட்டது தொடர்பாக தடயவியல் துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) நடைபெற்ற சோதனையின் போது இரும்பு பெட்டியில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையின் சிறப்பு சுற்றுலா திட்டத்தின் கீழ் பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு தனி ரயில் பெட்டி ஒதுக்கீடு செய்துதரப்படுகிறது. இதில், உத்தரபிரதேச மாநிலம் லக்னெள பகுதியைச் சேர்ந்த 64 பேர் தனி ரயில் பெட்டியில் பயணித்துள்ளனர். 

கடந்த 17 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய இவர்கள், கன்னியாகுமரியிலிருந்து மதுரை வந்துள்ளனர். புனலூர் - மதுரை விரைவு ரயிலில் இந்த சுற்றுலா பயணிகள் வந்த பெட்டி இணைக்கப்பட்டது. 

சனிக்கிழமை அதிகாலை 3.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றது. ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெட்டி அதிகாலை 5 மணியளவில் தீப்பற்றி எரிந்தது.  

இதில், அந்தப் பெட்டியில் இருந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் 9 போ் தீயில் கருகி உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்தனா். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்தது. 

உயிர்த்தப்பியவர்கள் விமானம் மூலம் சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் தனி விமானம் மூலம் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் பெட்டியில் உள்புறமாக இருந்து ரயில் பெட்டி கதவை பூட்டிவிட்டு, தேநீர் தயாரிக்க சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக உயிர்த்தப்பிய பயணி தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தீ விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தடயவியல் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரயிலில் சமைத்து சாப்பிடுவதற்காக சமையல் எரிவாயு உருளைகள், 30 கிலோக்கும் அதிகமான விறகுகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27)  தீ விபத்து நிகழ்ந்த ரயில் பெட்டியில் தடயவியல் துறை அதிகாரிகள் நடைபெற்ற சோதனையின் போது இரும்பு பெட்டியில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுத்துள்ளனர்.

பணப்பெட்டியில் பாதி எரிந்த நிலையில் இருந்த ரூ.500, ரூ.200 கட்டு பணத்தின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com