அயோத்தி ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் இந்த மாதம் செயல்படத் தொடங்கும்: ஜோதிராதித்ய சிந்தியா தகவல்

அயோத்தி ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையம் இந்த மாதம் செயல்படத் தொடங்கும்
அயோத்தி ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் இந்த மாதம் செயல்படத் தொடங்கும்: ஜோதிராதித்ய சிந்தியா தகவல்


அயோத்தி ராமா் கோயில் மூலவரான குழந்தை ராமா் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில், அயோத்தி ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையம் இந்த மாதம் செயல்படத் தொடங்கும் என்று மத்திய எஃகு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டம், அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள ராமஜென்ம பூமியில் ராமா் கோயில் கட்டுமானப் பணி கடந்த 2020, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. சுமாா் 161 அடி உயர கோபுரத்துடன் 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் இந்தக் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் குடமுழுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையத்தின் தயார்நிலை பணிகள் குறித்து ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையம் இந்த மாதத்தில் இருந்து செயல்படத் தொடங்கும் என்றும் பக்தர்கள் விமானம் மூலம் அயோத்திக்கு செல்ல முடியும். இது அயோத்தியின் கலாசார திறனை அனைவருக்கும் வெளிப்படுத்தும் என்றும்  கூறினார்.

விமான நிலையப் பணிகள் முதற்கட்டமாக 2,200 மீட்டர் ஓடுபாதை மற்றும் 8 கவசங்களுடன் விரைவில் முடிக்கப்பட உள்ளது என்றார். 

65,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த விமான நிலையத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 3 விமானங்களை இயக்கும் திறன் கொண்டதாகவும், போயிங் 737 விமானங்கள் மற்றும் விமான பேருந்துகள் போன்ற விமானங்களை தரையிறக்க முடியும். 

ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றும்,அப்போது சர்வதேச விமானங்கள் விமான நிலையத்திலிருந்து எளிதாக புறப்படும் வகையில் ஓடுபாதையின் நீளம் 2,200 மீட்டரிலிருந்து  3,700 மீட்டராக நீட்டிக்கப்படும். 

மேலும், போயிங் 787 போன்ற பெரிய விமானங்கள் இந்த விமான நிலையத்தில் தரையிறங்க முடியும்.விமான நிலையத்தின் மொத்த பரப்பளவு இரண்டாம் கட்டத்தில் 65,000 சதுர அடியில் இருந்து 5 லட்சம் சதுர அடியாக அதிகரிக்கப்படும் என்றும் சிந்தியா கூறினார். 

இந்த ஆய்வின் போது அவருடன் மத்திய அமைச்சர் வி.கே. சிங் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com