தூய்மைப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்: அன்புமணி ராமதாஸ்

குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்: அன்புமணி ராமதாஸ்
Published on
Updated on
1 min read

குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளியின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பள்ளி மாணவர்கள் சிலர் சுத்தப்படுத்தும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாமக தலைவர்  அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, “சென்னை கொரட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை அப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள் சிலர் மிகவும் ஆபத்தான சூழலில் தூய்மைப்படுத்தும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

மாடியை ஒட்டி அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் சில மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேல் மின்சாரக் கம்பி செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலில் மாணவர்களை குடிநீர்த் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்தியது கண்டிக்கத்தக்கது.

அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குடிநீர் தொட்டிகள், வகுப்பறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்பது ஒருபுறமிருக்க, இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? என்பதை கண்டறிந்து சரி செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிக கட்டிடங்கள் உள்ள நிலையில், அவற்றின் பராமரிப்புக்காக போதிய நிதி அரசால் ஒதுக்கப்படுவதில்லை. அதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களே இந்த பணிகளை செய்ய வேண்டியுள்ளது.சில நேரங்களில் மாணவர்கள் மீது இந்தப் பணி திணிக்கப்படுகிறது.

இப்போதும் கூட மிக்ஜம் புயலில் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.1.9 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இதைக் கொண்டு ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக ரூ.2500 மட்டுமே வழங்க முடியும்.

பள்ளிக்கூடங்களில் சாய்ந்து விழுந்த ஒரு மரத்தை வெட்டி அகற்றவே ரூ.2500 தேவைப்படும் போது, அதே தொகையைக் கொண்டு ஒட்டுமொத்தப் பள்ளிக்கும் பராமரிப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் பராமரிப்புக்காக அரசு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com