நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு
நாமக்கல்: வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோயிலில் சனிக்கிழமை பரமபத வாசல் திறக்கப்பட்டது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற குடவறைக் கோயிலான அரங்கநாதர் சுவாமி, ரங்கநாயகி தாயார் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இங்கு பரமபத வாசல் திறக்கப்படுவதுடன், அதன் வழியாக உற்சவ மூர்த்திகளின்றி சுவாமியின் ஜடாரியை அர்ச்சகர் ஒருவர் தலையில் கொண்டு வரும் வைபவம் நடைபெறும். அதன்படி வைகுந்த ஏகாதசி நாளான சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு, மூலவரான சயனக் கோலத்தில் காட்சியளித்த சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிந்தா முழக்கங்கள் எழுப்பியபடி ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால், நாமக்கல் பேருந்து நிலையம் செல்லும் சாலை மூடப்பட்டு கோட்டை சாலை வழியாக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. நாமக்கல் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
இதேபோல், ராசிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்வில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில், தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில், சேந்தமங்கலம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பள்ளிபாளையம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. நாமக்கல் துணை கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் போலீஸார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.