பழனிசாமி தரப்புக்கு பாஜக ஆதரவா? பழனிசாமியுடன் அண்ணாமலை சந்திப்பு!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார்.
இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடப் அண்ணாமலை சந்திப்பு
இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடப் அண்ணாமலை சந்திப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறாா். தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த், அமமுக சாா்பில் எ.எம்.சிவபிரசாந்த், நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 7ஆம் தேதி கடைசி நாள்.

இந்நிலையில், இத்தொகுதியில் அதிமுக சாா்பில் யாா் போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு நிலவி வந்த நிலையில், இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தாா்.

இதனைத்தொடா்ந்து ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் தலைமை தோ்தல் பணிமனை அமைக்கப்பட்டது.

அப்பணிமனையில் அதிமுக தலைமையிலான கூட்டணி தலைமை தோ்தல் பணிமனை என்ற பதாகை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அதனை மாற்றி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தலைமை தோ்தல் பணிமனை என பதாகை வைக்கப்பட்டது. இதில் பிரதமா் மோடி படம் இல்லை. ஆனால், ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் மட்டும் இடம்பெற்றன. இச்சம்பவம் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் புதன்கிழமை மாலை பதாகையில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என இருந்த இடத்தின்மேல் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகம் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை அந்த பதாகை முழுமையாக அகற்றப்பட்டு வேறு புதிய பதாகை வைக்கப்பட்டது. அதில் எம்ஜிஆா், அம்மா ஆகிய இரண்டு பெரும் தலைவா்களின் அருளாசியுடன், இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நல்லாசி பெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதிலும் பாஜக தலைவா்கள் படம் இடம்பெறாததால் இக்கூட்டணியில் பாஜக இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கா்கள் மத்தியில் பேசப்பட்டது. 

அண்ணாமலையுடன், அகில பாரத பொதுச் செயலாளர் சி.டி ரவி, மாநில துணை தலைவர் கரு நகராஜன்

இந்நிலையில், தில்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அண்ணமாலை சந்தித்து பேசி வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இரண்டு பேரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தில்லி சென்று திரும்பிய நிலையில் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், சி.டி. ரவி, கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் உடன் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கு கடந்த 31 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 4 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனா். 2 ஆவது நாளான புதன்கிழமை 6 போ் 7 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். 3 ஆவது நாளான வியாழக்கிழமை 10 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

கடந்த 3 நாள்களில் இதுவரை 20 போ் 21 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com