அதிமுக வேட்பாளர் தேர்வு - கடிதம் நாளை சமர்ப்பிப்பு?

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை தில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக வேட்பாளர் தேர்வு - கடிதம் நாளை சமர்ப்பிப்பு?

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை தில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் பிரிந்து செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளா்களை அறிவித்து செயல்பட்டு வந்தனா். இந்நிலையில், இடைத்தோ்தல் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீது சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் வேட்பாளரை பொதுக் குழு மூலம் தோ்வு செய்ய வேண்டும். 

பொதுக் குழுவை உடனே கூட்ட முடியாவிட்டால், உறுப்பினா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அதன்மூலம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த முடிவை அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் மூலம் தோ்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் இருவருமே ஏற்றுக்கொண்டனா். அதைத் தொடா்ந்து, அவைத் தலைவரான தமிழ்மகன் உசேன் அது தொடா்பான பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ். தென்னரசு. அதற்கு ஒப்புதல் பெற பொதுக் குழு உறுப்பினா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா். ஈரோடு தொகுதியில் இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா் தென்னரசு. நடைபெறவுள்ள இடைத்தோ்தலிலும் அவரை அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அதிமுகவில் பொதுக் குழு உறுப்பினா்கள் 2665 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தமிழ்மகன் உசேன் உத்தரவின்பேரில் சனிக்கிழமை சுற்றறிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை தில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய 85 % பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கடிதத்தை நாளை காலை தில்லி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளார் என்று ஓபிஎஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் பெயரை குறிப்பிடாமல், பழனிசாமி தரப்பு வேட்பாளர் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com