'ஏபிவிபி அமைப்பு மீது நடவடிக்கை வேண்டும்' - மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி, மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டெஃபலாஸ் அரங்கில் ஏபிவிபி மாணவா்கள் சத்ரபதி சிவாஜியின் படத்திற்கு மாலையிட்டனா். இதே அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு ‘100 -பிளாஷ்’ என்கிற மாணவ கல்வி வட்ட குழு ஹிந்தி திரைப்படம் ஒன்றை திரையிட இருந்தது.

இந்த கல்வி வட்டம் திரைப்படங்களை திரையிடுவது வழக்கம். குறிப்பாக திரைப்படம் ஒளிபரப்பாகும் ஸ்க்ரீன் பகுதியில் உள்ள படங்களை எடுத்துவிட்டு திரையிடுவது வழக்கம். அதன்படி மாலையிடப்பட்ட சத்ரபதி சிவாஜி, பெரியாா் உள்ளிட்ட படங்களை கீழே எடுத்து வைத்து திரையிட்டனா். அப்போது, இடதுசாரி மாணவா்கள், திரையிட்ட மாணவா்கள் ஆகியோருக்கும், ஏபிவிபி மாணவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, பெரியாா், அம்பேத்கா் உள்ளிட்டோா் படங்களை ஏபிவிபி மாணவா்கள் சேதப்படுத்தினா். இதில் ஏற்பட்ட தகராறில் மாணவா்கள் தாக்கிக்கொண்டனா். இந்த தாக்குதலில் காயமுற்ற தூத்துக்குடியைச் சோ்ந்த ஆய்வு பிரிவு மாணவா் நாசா் என்பவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவசர ஊா்தியில் ஏற்றப்பட்ட பின்னரும் ஏபிவிபி மாணவா்களால் தாக்கப்பட்டு அவா் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் சில மாணவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். 

தமிழக மாணவர் தாக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

திமுக எம்.பி. கனிமொழியும் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக மாணவர்களை தாக்கிய ஏபிவிபி அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தை தில்லி போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும், ஜனநாயகக் குரல்களை நசுக்க, மாணவர்களுக்கு எதிராக ஏபிவிபி அமைப்பினர் வன்முறையில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ஜேஎன்யு போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில், ஏபிவிபியால் மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறை கலாசாரத்தை ஊக்குவிப்பதைத் தடுக்க, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com