குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!

புதுச்சேரியிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!
Published on
Updated on
2 min read


புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.

புதுச்சேரியையும், தமிழகத்தில் பல முக்கிய மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஏர் சஃபா விமான சேவை நிறுவனம் வரும் தீபாவளி பண்டிகை முதல் சிறிய விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியிலிருந்து சென்னை, திருப்பதி, வேலூர், மதுரை, சேலம், கோவை, திருச்சி, துத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கப் போகிறது.

சிங்கப்பூரை தலைமையமாகக் கொண்டு செயல்படும் ஏர் சஃபா நிறுவனம், புதுச்சேரியிலிருந்து கோவை மற்றும் பெங்களூருவுக்கு வெள்ளிக்கிழமை சோதனை முறையில் விமானங்களை இயக்கிப் பார்த்துள்ளது. இது குறித்து ஏர் சஃபா (இந்தியா) மேலாண் இயக்குநர் கே. முருகப்பெருமாள் கூறுகையில், 19 இருக்கைகள் கொண்ட குறைந்த தொலைவு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கோவை என இரண்டு விமான நிலையங்களுடன் இதர நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

செக் குடியரசிடமிருந்து இதுபோன்ற 5 விமானங்களை முன்பதிவு செய்துள்ளோம். அவை விரைவில் தமிழகம் வரும். இந்த வழித்தடங்களில் விமானங்களை இயக்க அனுமதி கோரியிருக்கிறார். இதற்கு மூன்று முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம். வரும் தீபாவளி பண்டிகையின்போது இந்த சிறிய ரக விமானங்களை இயக்கும் திட்டம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏர் சஃபாவைப் பொறுத்தவரை, வணிக விமானங்களை இயக்குவதற்கான அதன் முதல் முயற்சி இது. "நாங்கள் பெரிய விமான ஆபரேட்டர்களுடன் போட்டியிடவில்லை, ஆனால் எங்களுடையது அவர்களின் இயக்கத்திற்கு துணையாக இருக்கும்" என்று முருகப்பெருமாள் கூறினார்.

ஒரு பயணத்துக்கு ஒருவருக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையிலான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வரவேற்பைப் பொருத்து ஒரே வழித்தடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் நாள்தோறும் இயக்கப்படும். புதுச்சேரி - சென்னை இடையே இரண்டு விமான சேவை தேவைப்படும். காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையிலுள்ள புதிய விமான நிலையத்திலிருந்து 2013-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், பயணிகள் எண்ணிக்கை குறைவால் 2014-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு, சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது. இதை புதுவை முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

சிறிய ரக விமான சேவையை தொடங்கவுள்ள தனியாா் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சதீஷ்குமாா் விமான சேவை குறித்து முதல்வா் உள்ளிட்டோருக்கு விளக்கமளித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டின் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில், உதான் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் இருந்து 19 இருக்கைகள் கொண்ட விமான சேவையைத் தொடங்க உள்ளோம். அதைக் காட்சிப்படுத்தவே புதுச்சேரிக்கு எடுத்து வந்தோம். சிறிய ரக விமானங்கள் இறங்குவதற்கு 600 மீட்டா் நீள ஒடுதளம் போதுமானதாகும் என்றாா் சதீஷ்குமாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com