ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: திருப்பூரில் 5 பேர் கைது; 500 சிம் கார்டுகள் பறிமுதல்

திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சஷாங்க் சாய் உள்ளிட்டோர்.
திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சஷாங்க் சாய் உள்ளிட்டோர்.

திருப்பூர்: திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் பெருமாநல்லூரை அடுத்த பொங்குபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கைபேசியில் பைசா ஹோம் என்ற கடன் செயலியைப் பதவிறக்கம்(டவுன்லோடு) செய்துள்ளார். இந்த செயலி மூலமாக கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி ரூ. 3 ஆயிரம் கடனைப் பெற்று திருப்பிச் செலுத்தியுள்ளார். இதன் பின்னரும் அவருக்கு தொடர்ந்து கடன் பெறத்தகுதியானவர் என்று குறுச்செய்தி வரத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஸ்பீடு லோன், ஈஸி லோன் (நைஜீரியா), கேன்டி பே(இந்தோனேஷியா), லக்கி மணி(சீனா) ஆகிய 4 வெளிநாட்டு செயலிக்கள் மூலமாக ரூ.15 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

இதன் பின்னர் தவணைக்காலம் முடிவடையும் முன்பாகவே பணத்தை செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும், அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைமில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி உத்தரவின்பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சித்ராதேவி தலைமையில் காவலர்கள் பாலுசாமி, சந்தானம், பரமேஸ்வரன், கருப்பையா, முத்துகுமார், சந்தோஷ், சுதாகர் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய நபர்கள் திருப்பூர் காதர் பேட்டையில் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் நடத்திய சோதனையில் 500 சிம்கார்டுகள், 11 சிம்பாக்ஸ், 6 மோடம், 3 மடிக்கணினி வைத்து 5 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக கேரள மாநிலம் கோழிக்கோடு மடவூரைச் சேர்ந்த எச்.முகமது அஸ்கர்(24), கொடுவாளியைச் சேர்ந்த எம்.முகமது ஷபி(36), மலப்புரம் கோட்டக்கலைச் சேர்ந்த எஸ்.முகமது சலீம்(37), மலப்புரம் வைக்கத்துரைச் சேர்ந்த எம்.அனீஷ்மோனா(33), மானூரைச் சேர்ந்த எஸ்.அஸ்ரப்(46) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கைதான 5 பேரும் துபையில் வேலை செய்துள்ளதும், முகமது சலீம் மீது கொரட்டி காவல் நிலையத்திலும், அனீஷ்மோன மீது கானாதூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இவர்கள் 5 பேரூம் கடன் செயலி மூலமாக எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிந்த சைபர் கிரைம் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சஷாங்க் சாய் வெகுவாகப் பாராட்டினார்.

கடன் செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம்

திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கூறுகையில், முன்பின் தெரியாத கடன் செயலிகளை கைபேசிகளில் டவுன்லோடு செய்து ஏமாற வேண்டாம் என்றும், தங்களது பெயரை தவறாக இணையத்தில் உபயோகப் படுத்துவதைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com