சென்னையில் அகலமாகும் 7 சாலைகள்! அடிபடும் கட்டடங்கள்!

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுடனான இணைப்பை மேம்படுத்த, மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் அகலமாகும் 7 சாலைகள்! அடிபடும் கட்டடங்கள்!

சென்னை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களுடனான இணைப்பை மேம்படுத்த, மேம்பாலம், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சென்னையில் நெரிசல் மிகுந்த 7 முக்கிய சாலைகளை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

சாலைகளை அகலப்படுத்துவதற்கான ஆய்வுப் பணியை சென்னை பெருநகர  வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தொடங்கியுள்ளது.

சர்தார் படேல் சாலை, எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, புதிய ஆவடி சாலை மற்றும் வெளிவட்டத்தில் உள்ள பல சாலைகளை விரிவாக்கம் செய்ய சிஎம்டிஏ முன்வந்துள்ளது.

அண்ணா சாலை முதல் மத்திய கைலாஷ் வரையிலான சர்தார் படேல் சாலையில் 3 கி.மீ. தொலைவுக்கு, சாலையின் அகலம் 20 மீட்டரில் இருந்து 30.5 மீட்டராக விரிவுபடுத்தத் திட்டமிடப்படுகிறது.

நிலம் கையகப்படுத்துவதற்கான திட்ட அட்டவணை தயாரிக்கும் பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“வனத்துறையிடம் இருந்து நிலத்தை எடுக்க மாட்டோம். சர்தார் படேல் சாலையை விரிவுபடுத்தும் முயற்சியில், நடுவிலுள்ள தடுப்பை மாற்ற வேண்டியிருக்கும். கையகப்படுத்தப்படும் தனியார் நிலத்தின் பரப்பளவு விரைவில் இறுதி செய்யப்படும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், சர்தார் படேல் சாலையின் ஆய்வு திங்கள்கிழமைக்குள் நிறைவடையும். எத்திராஜ் சாலையை அகலப்படுத்துவதற்கான ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படும். எழும்பூரில் உள்ள பாந்தியன் சாலை சந்திப்பில் இருந்து கூவம் வரை எத்திராஜ் சாலை 18 மீட்டர் அகலமாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையையும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையையும் இணைக்கும் வில்லேஜ் சாலை 27 மீட்டராக அகலப்படுத்தப்படும்.

நெரிசல் நேரங்களில் போக்குவரத்தை மேம்படுத்தவும், போக்குவரத்துக்கான இடையூறுகளை அகற்றவும், போக்குவரத்து நெரிசலை எளிதாக்கவும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான இணைப்பை  மேம்படுத்தவும் மற்றும் பெருநகரப் பகுதியில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த சாலை விரிவாக்கம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்தார் படேல் சாலை போன்ற சாலைகளை விரிவுபடுத்துவது பற்றி 1975 ஆம் ஆண்டு முதல் பெருந்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு இரண்டாவது பெருந்திட்டத்திற்குப் பிறகு, சாலை விரிவாக்கத்திற்குத் தேவையான நிலத்திற்கான பரிசுப் பத்திரத்தை சிஎம்டிஏ பெறத் தொடங்கியது. 

பெரும்பாலான தனியார் நிலங்கள், கட்டங்கள் சாலை அகலப்படுத்துவதற்காக பரிசுப் பத்திரம் மூலம் கையகப்படுத்தப்பட்டன. சாலையை அகலப்படுத்துவதற்கு இதுவரை பரிசுப் பத்திரம் வழங்காத தனியாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையின் அகலம் 18 மீட்டராகவும், ஹண்டர்ஸ் சாலை 24 மீட்டராகவும், கோடம்பாக்கம் ஹைரோடு மற்றும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் வில்லேஜ் சாலை 27 மீட்டராகவும் விரிவுபடுத்தப்படும். நெல்சன் மாணிக்கம் சாலை - ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரை 18 மீட்டருக்கு டேங்க் பண்ட் சாலை அகலப்படுத்தப்படும்.

ஈ.வே.ரா. சாலையில் இருந்து புதிய ஆவடி சாலை. பெரியாறு சாலை முதல் கீழ்ப்பாக்கம் வரை 18 மீட்டருக்கு நீர்நிலைகள் செல்லும் பாதைகள் அகலப்படுத்தப்படும். சிறுவள்ளூர் சாலை சந்திப்பு முதல் நகர எல்லை வரையிலான பேப்பர் மில் சாலை 18 மீட்டராக விரிவுபடுத்தப்படும். எல்.பி. அடையாறில் உள்ள சாலை 30.5 மீட்டராக அகலப்படுத்தப்படும்.

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதற்காக, மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்படுவதால் அந்த சாலை பகுதிகளில் உள்ள பழமையான கட்டங்கள், மரங்கள் அடிபடுவதால் அவைகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சாலை விரிவாக்கத்துக்கு தேவையான இடங்கள், கட்டடங்களை கையகப்படுத்துவது, கையகப்படுத்தப்படும் கட்டடங்களை இடிப்பது, அந்த இடங்கள், கட்டடங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்மானிப்பது, விரிவாக்கம் செய்யப்பட உள்ள பகுதியில் இருக்கும் மரங்களை அகற்றுவது போன்ற சாலை விரிவாக்கத்தை மேற்கொள்ள சாத்தியமான மேம்பாடுகளை அடையாளம் காணும் பணிகளை இந்தக் குழு ஆய்வு செய்யும். 

இந்த ஆய்வறிக்கையை ஆலோசனைக் குழு ஒரு மாதத்தில் அளிக்கும். அதன்பின்பு சாலை விரிவாக்கத்துக்கு தேவையான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்கப் பணிகள் தொடங்கும்.

தற்போது இருந்துவரும் பாதசாரிகளின் நடை மேடையைத் தவிர்த்து புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அகலத்தில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்படும்.

இதேபோன்று சென்னையையொட்டி உள்ள வெளிவட்டச் சாலைகளுடன் அந்த சாலைகளையட்டி உள்ள கிராமச் சாலைகளை இணைக்கும் திட்டம் உள்ளது. முதல்கட்டமாக சீமாபுரம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்கள் வெளிவட்டச் சாலையுடன் இணைக்கப்படும்  என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் அபூர்வா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ரா ஆகியோர், மாநகரப் பகுதியின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சாலைகளை விரிவாக்கும் பணிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com