தச்சன்குறிச்சியில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு 

தச்சன்குறிச்சியில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
2 min read

தச்சன்குறிச்சியில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தச்சன்குறிச்சியில் இன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி பாதுகாப்பு நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அரசு விதிமுறைகளின்படி ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் என கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் உள்ள அன்னை அடைக்கலமாதா தேவாலய திருவிழா மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஆட்சியா் கவிதா ராமு தலைமையில், சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை ஆகியோா் முன்னிலை வெள்ளிக்கிழமை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

முன்னதாக, கடந்த 2 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நிகழாண்டில் அறிவுறுத்தப்பட்ட புதிய விதிகளான இணையதளப் பதிவு, காளைகளுக்கு காப்பீடு அவசியம் உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி வியாழக்கிழமை கிடைத்த நிலையில், போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. போட்டியில் பங்கேற்பதற்காக இதுவரை 400-க்கும் மேற்பட்ட காளைகளின் விவரங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மாடுபிடி வீரா்கள் சுமாா் 250-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். மேலும், போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர, வாடிவாசல், பாா்வையாளா்கள் மாடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே தலைமையில் காவல்துறையினா் மேற்கொண்டு வந்தனர். போட்டிக்கான முன்னேற்பாடுகளை கோட்டாட்சியா் முருகேசன், வட்டாட்சியா் சு. ராஜேஸ்வரி மற்றும் அலுவலா்கள் கண்காணித்து ஆய்வு செய்து வந்தனர்.  இந்நிலையில், அரசின் அறிவுறுத்தலின்படி,  தச்சன்குறிச்சி கிராமத்தில் வெள்ளிக்கிழமை(ஜன.6) நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி போதிய பாதுகாப்பு இல்லாததால் ஜல்லிக்கட்டு போட்டியை தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்திவைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த விழா குழுவினர் மற்றும் கிராமமக்கள் செங்கிப் பட்டி, கந்தர்வகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர், மேலும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் வாகனங்களை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதபாண்டே தலைமையிலான 300க்கும் மேற்ப்பட்ட போலீசார் சம்ப இடத்திற்கு சென்று அதிகாரிகளை மீட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட கிராம மக்களை அப்புறப்படுத்தினர். மேலும், தச்சன்குறிச்சி கிராம முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறததால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்த காளைகள் திருப்பி அனுப்பப்பட்டும், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுப் பொருள்கள், மாடுபிடி வீரர்கள் காலையின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மிகுந்த மன வேதனையுடன் திரும்பிச் சென்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் கிராமம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதி மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com