கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பயணம்: 13-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்!

உலகின் மிக நீளமான ‘எம்வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் பயணத்தை உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 13 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 
கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பயணம்: 13-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்!


வாரணாசி: உலகின் மிக நீளமான ‘எம்வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் பயணத்தை உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 13 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 

இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள ஐந்து மாநிலங்களில் உள்ள 27 நதி அமைப்புகளில் 3,200 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு இந்த சொகுசு கப்பல் பயணிக்கிறது.  

கங்கா விலாஸ் சொகுசு கப்பலானது வாரணாசியில் இருந்து புறப்பட்டு பாட்னா நகரை சென்றடைந்து, பின்னர் கொல்கத்தாவுக்கு செல்லும். அதன் பின்பு வங்கதேசத்திற்கு புறப்பட்டு சென்று மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும். இதன் பயணம் அசாமின் திப்ரூகார் நகரில் முடிவடையும். 

80 பயணிகள் பயணிக்கக்கூடிய கங்கா விலாஸ் சொகுசு கப்பல் குறித்து அதிகாரிகள் கூறுகையில், நாட்டின் சிறந்தவற்றை உலகுக்குக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கப்பல் உலக பாரம்பரியமிக்க இடங்கள், தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், நதியின் மலைகள் மற்றும் பிகாரில் உள்ள பாட்னா, ஜார்கண்டில் உள்ள சாஹிப்கஞ்ச், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, வங்கதேசத்தின் டாக்கா மற்றும் அஸ்ஸாமின் குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்கள் உள்பட 50 சுற்றுலா தலங்களுக்கு 51 நாள்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

மொத்தம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்க உள்ளது. வெளிநாட்டு பயணிகளும் இதில் பயணம் செய்ய உள்ளனர். 

கங்கா விலாஸ் கப்பல் 62 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கப்பல் மூன்று தளங்கள், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் திறன் கொண்ட 18 அறைகளைக் கொண்டுள்ளது, சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்கமுடியாத மற்றும் ஆடம்பரமான அனுபவத்தை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கப்பலில் மாசு கட்டுப்பாடு மற்றும் ஒலி கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் உள்ளன. 

இந்திய சுற்றுலா குறித்து உலக மக்களுக்கு செய்தி அளிக்கும் வகையிலும், உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த பயணம் இருக்கும். நாட்டில் இந்தத் துறையின் அதிகபட்ச வெளிப்பாடு மற்றும் விரைவான வளர்ச்சிக்காக நதி சுற்றுலா பயணங்கள் உருவாக்கப்பட்டு தற்போதுள்ள சுற்றுலா பயணங்களுடன் ஒருங்கிணைக்கப்படும் என கூறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com