
சென்னை: சாலை மற்றும் பொதுவிடத்தில் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு முதலுதவி செய்யும் ஏஇடி கருவியை சோளிங்கநல்லூர் சிக்னல் பகுதியில் பொருத்தி தாம்பரம் ஆணையரகம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.
ஆட்டோமேடட் எக்ஸ்டர்னல் டெஃபிப்ரூலேட்டர் எனப்படும் ஏஇடி கருவியானது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரியும் ஒருவருக்கு, மருத்துவக் குழுவினர் வந்து முதலுதவி செய்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முந்தைய கோல்டன் நேரம் என்பதைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்ற உதவும் கருவியாகும். இந்த கருவியின் மூலம் மாரடைப்பு ஏற்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. உலகின் நீண்ட சொகுசுப் படகில் நாம் பயணிக்க முடியுமா? எவ்வளவு கட்டணம்?
அலர்ட் எனப்படும் தன்னார்வலக் குழுவுடன் இணைந்து தாம்பரம் ஆணையகரம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏஇடி கருவியின் விலை ரூ.1.35 லட்சமாகும்.
பொதுவிடங்களில் மாரடைப்பு ஏற்படுவது அதிகம். எனவே, மருத்துவக் குழுவினர் வருவதற்கு முன்பு, அவர்களை காப்பதாற்றுவதற்கான முயற்சிகள் கிடைப்பது அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள், காவல்துறையினர், பொதுமக்கள், கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கருவிலேயே அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்குமாம். இந்த கருவியின் மூலம், மாரடைப்பு ஏற்பட்டவரின் இதயத்துக்கு வெளியிலிருந்து ஒரு அழுத்தம் அல்லது மின்அலைகள் மூலம் ஷாக் கொடுத்து இதயத்தை மீண்டும் துடிக்க வைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...