
ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த வார இறுதியில் தில்லி சென்று திரும்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, புதன்கிழமை காலை மீண்டும் தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ரவி சந்திக்க வாய்ப்புள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற குழு தலைவா் டி ஆா் பாலு, நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆ.ராசா, பி. வில்சன், என்.ஆா். இளங்கோ ஆகியோா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை கடந்த வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் அவரது மாளிகையில் சந்தித்தனா். பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த புகார் மனுவை சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, குடியரசுத் தலைவரிடம் அளித்ததுடன் அதுகுறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.
குடியரசுத்தலைவா் மனுவைப் படித்துப் பாா்த்த பின்னா், ‘ நான் பாா்க்கின்றேன்’ என தெரிவித்தாா்.
இதனைத் தொடர்ந்து பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புகார் மனுவை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுப்பியிருந்தார்.
இதையடுத்து கடந்த வார இறுதி நாளில் தில்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் மீண்டும் தமிழ்நாடு திரும்பினார்.
இதையும் படிக்க | அதிமுகவை ஒன்றிணைக்க இபிஎஸ் - ஓபிஎஸ்ஸை சந்திப்பேன்: சசிகலா
இந்நிலையில், புதன்கிழமை காலை இரண்டு நாள் பயணமாக மீண்டும் தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் ஆளுநர் ரவி. தில்லி சென்றுள்ள ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்தும் மத்திய உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் பேசக்கூடும் என தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தில்லியில் இருந்து சென்னை திரும்ப இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பயணமும் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.