ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பில் எங்கள் அணி போட்டி: ஓபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 
ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பில் எங்கள் அணி போட்டி: ஓபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி அணி தங்கள் தரப்பு போட்டியிடும் என்று கூறிய நிலையில் ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எங்கள் அணியினர் போட்டியிடுவோம். தேர்தல் படிவத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் கையெழுத்திடுவேன். 

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கினால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க நான் எப்போதும் காரணமாக இருக்கமாட்டேன். உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தேர்தல் படிவத்தில் நான் கையெழுத்திட்டு எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பினேன். ஆனால் அவர் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு நான் காரணம் அல்ல என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது சமீபத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்கூட நாங்களே கலந்து கொண்டோம். இரட்டை இலை சின்னம் கேட்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. 

அதிமுக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் தலையாய கோரிக்கை. தொண்டர்களின் கோரிக்கையும் அதுதான். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக ஆதரவு கேட்டால் கொடுப்போம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோருவோம். எங்களிடம் கூட்டணி கட்சியினர் பேச்சுவார்த்தையில்தான் இருக்கின்றனர்.

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியது நாங்கள் அல்ல. இந்த குழப்பத்தைத் தவிர்க்க அதிமுகவில் அனைத்து சக்திகளும் ஒண்றிணைய வேண்டும். 

எடப்பாடி பழனிசாமி அணியிடம் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். கட்சியின் ஒருங்கிணைப்புக்காக அவருடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். 

ஈரோடு கிழக்கு வேட்பாளரை மாவட்டச் செயலாளர், மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பார்கள். 

எம்ஜிஆர், ஜெயலலிதா காப்பாற்றி வந்த கழக விதிகளைப் பின்பற்றவும் அவர்கள் கொண்டு வந்த விதிகள் செல்லும் என்று நீதிமன்றம் கூறும் வரை சட்டப் போராட்டம் தொடரும். அதிமுக விதிகளின்படி கட்சி நடக்க வேண்டும் என்பதுதான் இன்றைய தர்மயுத்தம்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com