அதிமுக வேட்பாளர் இவரா? ஈரோட்டில் முகாமிட்டு இபிஎஸ் தீவிர ஆலோசனை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.வி.இராமலிங்கம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்எல்ஏவான கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக வியூகம்.
அதிமுக வேட்பாளர் இவரா? ஈரோட்டில் முகாமிட்டு இபிஎஸ் தீவிர ஆலோசனை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.வி.இராமலிங்கம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களில் அவர் பெயரும் இடம்பெற்றுள்ளதால், முன்னாள் எம்எல்ஏவான கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.  

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக திருமகன் ஈவெரா தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் ஒரு வாரத்துக்கு முன்பே மக்களை வீடு வீடாகச் சந்தித்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன.

ஆனால் கொங்கு மண்டலத்தில் வலிமையான வாக்காளர் கட்டமைப்பைக் கொண்ட அதிமுக இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிமுக வலிமையான வேட்பாளரை களமிறக்கும் என அரசியல் கட்சிகளால் எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் முன்னாள் அமைச்சரான கே.வி.இராமலிங்கம் இங்குப் போட்டியிடலாம் என யூகங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம் பெயர் இடம்பெற்றுள்ளதால் அவர் வேட்பாளர் இல்லை என உறுதியாகி உள்ளது. 

இதன் மூலம் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இவர் பிரிக்கப்படாமல் ஒரே தொகுதியாக இருந்தபோது 2001 தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதியாக பிரிக்கப்பட்ட பிறகு 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.    

2021 தேர்தலில் தமாக வேட்பாளரான எம்.யுவராஜாவுக்கு இந்த தொகுதியை விட்டுக்கொடுத்தார். இதனால் கட்சியினருக்கும், மக்களுக்கும் நன்கு அறிமுகமான கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.  இதனிடையே வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்க ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.இராமலிங்கம்,  மூத்த நிர்வாகிகள், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள், தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com