சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறார் ஜோதிடர்?

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சியால் யாருக்கு நன்மை, மத்தியம பலன் யாருக்கு என்பதை தினமணி இணையதளத்தின் ஜோதிடம் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 
சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறார் ஜோதிடர்?

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜனவரி 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.04 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான்.

சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் தலைவர். நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் - ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றிக்கும் அதிபதி அதாவது காரகன் சனியாவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள்ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம். 

சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள்

உழைப்பு, சமூக நலம், தேச தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைக் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும்.

குருவிற்கு பார்வை பலமும் சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகளில் இருக்கும் தடை தாமதத்தை நமக்கு உணர்த்தும் கிரகம் சனியாகும். சனி இருக்கும் கிரகத்தை வைத்தே ஒருவரது வாழ்வில் இருக்கும் தடைகளை தெரிந்துகொள்ள இயலும். சனி எங்கு இருக்கிறாரோ அதற்குண்டான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நாம் தடைகளை அகற்ற முடியும்.

சனியின் பலம்

சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது சனி இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

சனிப் பெயர்ச்சி

திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு சனி பகவான்ஜனவரி 17, 2023 மாலை 6 மணியளவில் பெயர்ச்சி ஆகிறார். 

வாக்கியப் பஞ்சாங்கம் அடிப்படையில் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு அதிசாரம் சனி பெயர்ச்சியாக பங்குனி 15ம் தேதி -  29.03.2023 - புதன்கிழமை வருகிறது. வக்கிர சனி பெயர்ச்சி ஆகஸ்ட் 24, 2023ல் வருகிறது. வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில்  சனி பெயர்ச்சி டிசம்பர் 20,2023 வருகிறது.

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்

நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் - கன்னி - துலாம் - தனுசு

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: மேஷம் - ரிஷபம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: கடகம் - சிம்மம் - வ்ருச்சிகம் - மகரம் - கும்பம் - மீனம்

பொது பலன்கள்

கும்ப ராசியில் இருக்கும் அவிட்ட நக்ஷத்ரத்தின் மூன்றாம் பாதத்திற்கு சனி பகவான் மாற்றம் பெறுகிறார். தனது மூன்றாம் பார்வையால் மேஷத்தையும் - ஏழாம் பார்வையால் சிம்மத்தையும் - பத்தாம் பார்வையால் வ்ருச்சிகத்தினையும் பார்க்கிறார். அம்சம் என்பது சுக்கிரன் வீட்டில் விழுகிறது. அவிட்டம் செவ்வாயினுடைய நக்ஷத்ரம் ஆகும். பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்னைகள் தலைதூக்கலாம். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். இந்த சனி மாற்றம் தனது இன்னோரு வீட்டில் இருக்கிறது. சனியின் பார்வை ராகுவின் மீது விழுகிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். வெப்பம் அதிகமாக இருக்கும். பணநடமாட்டம் சீராக இருக்கும்.

கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குருவின் மாற்றத்திற்குப் பிறகு ஆன்மீகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தாமான பிரச்னைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும். அதே வேளையில் கேதுவிற்கு முதல் திரிகோணத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மீகம் - கோவில் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும். குழந்தைகளுக்கு அதிகமான நோய்கள் உண்டாகலாம். செயற்கை கருத்தரிப்பு அதிகமாகும்.

ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை

நக்ஷத்ரம் சனியின் நிலை
மேஷம் நீசம்
ரிஷபம் நட்பு
மிதுனம் நட்பு
கடகம் பகை
சிம்மம் பகை
கன்னி நட்பு
துலாம் உச்சம்
விருச்சிகம் பகை
தனுசு நட்பு
மகரம் ஆட்சி
கும்பம் ஆட்சி
 மீனம் நட்பு

சனி பயோடேட்டா

சொந்த வீடு - மகரம், கும்பம்
உச்சராசி - துலாம்
நீச்சராசி - மேஷம்
குணம் - குரூரம்
மலர் - கருங்குவளை
ரத்தினம் - நீலம்
கிரக லிங்கம் - அலி
வடிவம் - நெடியர்
பாஷை - அன்னிய பாஷை
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 2 1/2 வருஷம்
வஸ்திரம் - கருப்பு பட்டு
க்ஷேத்திரம் - திருநள்ளாறு, திருக்குளந்தை(பெருங்குளம்), சனிசிக்னாபூர், தனி விநாயகர் மற்றும் ஆஞ்சநேய ஸ்வாமி  கோவில்கள்
ஆசனம் - வில் அம்பு
ஸமித்து (ஹோமக் குச்சி) - வன்னி
நைவேத்தியம் -  எள்ளு சாதம் (இனிப்பு அல்லது காரம்)
தேவதை - ம்ருத்யு, சிலர் எமன் என்பர்
ப்ரத்யதி தேவதை - திருமுக்தி, பிரஜாபதி
திசை - மேற்கு
வாகனம் - காக்கை சிலர் கழுகையும் சொல்கின்றனர்.
தானியம் - எள்
வஸ்து - எண்ணைய் அதிலும் நல்லெண்ணெய்
உலோகம் - இரும்பு
கிழமை - சனிக்கிழமை
பிணி - வாதம்
சுவை  - கைப்பு
நட்பு கிரகங்கள் - புதன், தேய்பிறை சந்திரன், சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், வளர்பிறை சந்திரன், செவ்வாய்
சம கிரகங்கள் - குரு (வியாழன்)
காரகம் - ஆயுள்
தேக உறுப்பு - தொடையிலிருந்து கால்கள் வரை
நக்ஷத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை வருடம் - 19 ஆண்டுகள்
மனைவி - நீளாதேவி
உபகிரகம் - மாந்தி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com