புத்தாண்டு - சனிப் பெயர்ச்சி 2023: பொதுப் பலன்கள்

2023 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் சனிப் பெயர்ச்சிக்கான பொதுப் பலன்களை தினமணியின் ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
சனிப் பெயர்ச்சி 2023
சனிப் பெயர்ச்சி 2023

2023 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் சனிப் பெயர்ச்சிக்கான பொதுப் பலன்களை தினமணியின் ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

சுபகிருது தட்சிணாயணம் மார்கழி மாதம் 17-ஆம் தேதி (1.1.2023)  ஹேமந்தருது, சுக்ல பட்சம் (வளர்பிறை), தசமி, சனிக்கிழமை முடிந்து ஞாயிற்றுக்கிழமையன்று மேஷ ராசி அசுவினி நட்சத்திரம் 2-ஆம் பாதம் சிவநாம யோகம் தைதுல கரணம் சித்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் கன்னி லக்கினத்தில் மேஷ ராசியில், ரிஷப நவாம்ச லக்கினத்தில், ரிஷப நவாம்ச ராசியில் பிறக்கிறது.

இந்த 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லக்னாதிபதி புத பகவான் சதுர்த்த கேந்திரத்தில் புத ஆதித்ய யோகம் பெற்று, உச்ச கேந்திரமான தசம ஸ்தானமான ஜீவன ஸ்தானத்தைப் பார்வை செய்வதால், இந்த ஆண்டில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நவீன விஞ்ஞானத்தினர் மேன்மையடைவார்கள்.  தனபாக்கியாதிபதி சுக்கிரபகவான், பஞ்சமஸ்தானமான ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்றுள்ள பஞ்சமாதிபதியுடன் இணைந்து லாபஸ்தானத்தைப் பார்வை செய்வதால் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள், பெண்கள், வண்டி, வாகனத் துறை, வெள்ளி, சிமென்ட், பிளாஸ்டிக், ரயில் வண்டிகள், கனரக வாகனங்கள், டயர், டிரோன் போன்றதுறைகளும் வளர்ச்சி அடையும்.

சுக களத்திராதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று, பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ஸ யோகத்தைப் பெறுகிறார். இதனால் ஆன்மிகம், சிற்பத்துறை, தான, தர்ம காரியங்கள், தனியார், பொது அறக்கட்டளைகள், மிகப்பெரிய திட்டங்களைத் தீட்டுதல், இளைஞர்கள், யுவதிகளின் சிறப்பான வளர்ச்சி ஆகியன உண்டாகும். 
தைரிய அஷ்டாதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வர்கோத்ததமத்தில் அமர்ந்திருப்பதால், நமது ராணுவம் பளிச்சென்று வெளியுலகுக்குத் தெரியவரும். 

நீதித் துறையிலும் புதிய முன்னேற்றம் வளர்ச்சி உண்டாகும். வெளிநாடுகள் சம்பந்தப்பட்டவிஷயங்களில் கடினமான முடிவுகளை எடுத்து அதனால் பல பிரச்னைகள் தீர்க்கப்படும்.

ராகு/கேது பகவான்கள் லக்ன சுபர்களாகி தனம், அஷ்டம ஸ்தானத்தில் வலுத்திருப்பதால், நூதன வகையில் முயற்சியும் முன்னேற்றமும் உண்டாகும். குறிப்பாக, நீதிக்காரகரான சனி பகவானும், யோகக்காரகரான ராகு பகவானும் வலுத்திருப்பதால் ஆன்மிகத்திலும், தெய்வீகத்திலும் பொருளாதரத்தில் மேன்மை உண்டாகும் ஆண்டாக 2023 ஆங்கிலப் புத்தாண்டு அமைகிறது.

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது, தை மாதம் 3}ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை)  தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4}ஆம் பாதம், விருச்சிக  ராசி, கண்ட நாம யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில்,  சிம்ம நவாம்சத்தில்,  கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் (திருக்கணிதப்படி).

சனி பகவானும், குரு பகவானும் சேர்க்கை பெற்றிருந்தாலோ அல்லது சம சப்தமாகப் பார்த்துக்  கொண்டாலோ, சனி, குரு பகவான்கள் இணைந்திருப்பதாகப் பொருள்படும். இத்தகைய கிரக சேர்க்கையைப் பெற்ற ஜாதகன் முற்பிறவிகளில் கீழ்கண்ட புண்ணியங்களில் ஒன்றையோ பலவற்றையோ செய்திருப்பான். ஆலயங்கள் கட்டுதல், ஆலயங்களைப் பராமரித்தல், குரு சேவை செய்தல், யாகங்கள் செய்தல், தான தர்மங்கள் செய்தல், சாது சன்னியாசிகளை உபசரித்தல், அநாதை ஆஸ்ரமங்களைக் கட்டுதல், அநாதைக் குழந்தைகளைப் பராமரித்தல், சிவாச்சாரியார்களை உபசரித்தல் போன்ற புண்ணியங்களைச் செய்ததால் உண்டாகும் பிரதிபலன்கள் என்னவென்று பார்ப்போம்.

ஜாதகன் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவான். எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெறுவான். தொழில் மற்றும் உத்தியோகங்களில் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிப்பான். ஜாதகனுக்கு இல்லையென்று எந்தக் குறையும் இருக்காது. ஜாதகன்  கேட்காமலேயே பலவித உதவிகள் தேடி வரும். ஜாதகனுக்கு உதவ பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். ஜாதகனுக்கும் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். ஜாதகனின் வார்த்தைக்கு எல்லோரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். ஜாதகனுக்கு வாழ்க்கையில் முழு திருப்தி உண்டாகும்.

பஞ்ச பூதத் தத்துவத்தில் சனி பகவான் வாயு தத்துவத்தைப் பிரபலிக்கிறார். வாயு தத்துவம்} உடல், கை,கால்கள், விரல்களின் இயக்கம், சனி பகவானின் பலம் குறைந்தவர்கள் கை, கால்கள் செயலிழக்கப் பெறுவார்கள். சனி பகவானின் பலம் கூடியிருப்பவர்கள் வாயு தத்துவத்தின் அனுபவங்களைப் பெறுவார்கள்.  பெருக்கவும் இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள், சாதாரண விஷயத்துக்கும் கூட அதிகம் கோபப்படுபவார்கள், செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள், இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். நல்ல தோற்ற அமைப்பு பெற்றிருப்பார்கள்.

வாயு தத்துவம்-ஸ்ரீகாளஹஸ்தி - வாயு லிங்கம்.

சனி பகவான்- ஆயுள்காரகர்.

பருவக் காலங்களில் - சனிபகவான் -  பின்பனிக்காலம்.

எவருக்கும் ராஜ யோகம் என்று ஒரு யோகம் உண்டானால் அவருக்கு வாழ்வில் உன்னத ஸ்தானம் அமையும். செல்வம் திரளும். வெற்றி உண்டாகும். உபஜய ஸ்தானம் (வெற்றிக்கு உதவும் ராசிகள்) 3,6,10,11}ஆம் வீடுகளாகும். உபஜய ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களுக்கு பலம் அதிகம். அதே சமயம் அசுபக்கிரகங்களால் அந்தக் கிரகங்கள் பார்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதும் இந்த உபஜயஸ்தான வீடுகளின் அதிபர்களுக்கு யார் பகைவரோ அவரால் பார்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனை.

லக்னப்படி ஒரு பாவம் பலம் குறைந்திருந்தால், சந்திர லக்னப்படி பலம் கூடினால் அது சிறப்பு}  சத்தியாச்சாரியார் வாக்கு.

பஞ்ச (ஐந்து) வகை மஹா புருஷ யோகங்களில் சனி பகவானுக்குரியது சசமஹா யோகமாகும். இது சனி பகவான் லக்னத்துக்கோ அல்லது ராசிக்கோ (சந்திர பகவான் இருக்குமிடம்) 1,4,7,10 ஆகிய இடங்களில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்றிருந்தாலோ உண்டாவது இந்த யோகத்தால் சனி பகவானால் கிடைக்கக் கூடிய நற்பலன்கள் உறுதியாகக் கிடைக்கும். இந்தக் காலங்களில் வாங்கும் சொத்துகளை சுலபமாக விற்க முடியாது. இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தில் கும்பம், விருச்சிகம், சிம்மம், ரிஷபம் ஆகிய 4 ராசிகளுக்கு முறையே 1,4,7,10}ஆம் வீடுகளில் மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருப்பதால், சச மஹாயோகம் உண்டாகிறது. இப்படி இருப்பதால் ஏழரை சனி (கும்பம்), அர்த்தாஷ்டம சனி (விருச்சிகம்) , கண்டக சனி (சிம்மம்) ஆகிய சஞ்சாரத்தின் பலன்கள் பெருமளவுக்குக் குறையும்.

சனி பகவானுக்கு ஏழாம் வீடு திக் பலமாகும். இதனால் ஏழாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரித்தால் திக் பலம் உண்டாகி, ஏழாம் வீட்டின் பலத்தை பலனை விருத்தி செய்வார். இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தில் சிம்ம ராசிக்கு திக் பலத்துடன் சச மஹா யோகமும் உண்டாகிறது.

சனி பகவான்: விவசாயத் துறை, இயந்திர, சமுதாயம், பொதுமக்கள், எண்ணெய், ஆடுகள், எருமை மாடுகள், இரும்பு, ஈயம்.

எண் கணிதத்தில் சனி பகவான் எஃப். பி.- 8ஆம் எண்

சனி பகவான் ஜீவன காரகர் மற்றும் தத்துவப் பேராசிரியர் - வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுப்பவர்.

உடலில் முழங்கால், கணுக்கால், பாதம் - இவைகளைக் குறிப்பவர்.

சனி பகவான் 11-ஆம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள். சனி பகவான் 11-இல் தான் அமர வேண்டும். இதுதான் மஹோன்னதம். வாழ்க்கையில் அத்தனை சுக போகங்களையும் தைரியமாக அனுபவிப்பார்.

பொதுவாக, ஜாதகத்தில் சனி பகவான் நின்ற இடம் விருத்தியாகும் என்பது ஜோதிட விதி. இதை "ஸ்தான விருத்தி கரோதி மந்தக:
சனி பகவானுக்கு மட்டும் தொடர்ந்து இரண்டு ராசிகள் சொந்த வீடுகளாக அமைகிறது. அதாவது, 60 பாகை விஸ்தீரணத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். இது வேறு எந்தக் கிரகத்துக்கும் அமையவில்லை.

பஞ்சாங்கம் குறிப்பதிலும் ஜாதக பலன்கள் பார்ப்பதிலும் திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. எது சரி என்பது தொடர்பாக நீண்ட விவாதம் நடந்துகொண்டுதானிருக்கிறது.

பஞ்சாங்கம் குறிப்பதிலும் ஜாதக பலன்கள் பார்ப்பதிலும் திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. எது சரி என்பது தொடர்பாக நீண்ட விவாதம் நடந்துகொண்டுதானிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com