சேலம் சாதிய அடக்குமுறை விவகாரம்! திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!

கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்ய முயன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை அவதூறாக பேசிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட  திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது.
மாணிக்கம்
மாணிக்கம்

சேலம்: கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்ய முயன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை அவதூறாக பேசிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்டோர் மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு  நிலவியது.

சேலம் திருமலைகிரி அருகே மாரியம்மன் திருக்கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் வழிபடக்கூடிய இந்த மாரியம்மன் திருக்கோயிலில் அந்த பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்குள் நுழைந்து வழிபட முயன்றுள்ளார். இதனைத் தடுத்து நிறுத்திய மற்றொரு சமூகத்தினர் இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அடிப்படையில் விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவரும் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மாணிக்கம் என்பவர், தனது சமுதாய மக்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இளைஞரையும் அவரது தந்தையையும் கடுமையாக அவதூறாக ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த விடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

ஊராட்சி மன்ற தலைவரின் இந்த நடவடிக்கையை பல்வேறு அமைப்புகள் கண்டித்து அறிக்கை விட்டு தமிழக முதலமைச்சருக்கும் காவல்துறையினருக்கும் புகார் அளித்திருந்தனர்

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் இந்த நடவடிக்கையை கண்டித்துடன் அவரை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக தலைமை கழகம் அறிவித்தது

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் இரும்பாலை காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் மனு கொடுத்தார். ஊராட்சி மன்ற தலைவர் தன்னை அவதூறாக சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் தலித் என்ற ஒரே காரணத்திற்காக அனைவரும் முன்னிலையும் தன்னை அவமானப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இரும்பாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய ஊராட்சி மன்ற தலைவர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரது வாகனத்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் 

அவரை கைது செய்யக்கூடாது என மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து காவல் துறையினர் பொதுமக்களை சாந்தப்படுத்தி ஊராட்சி மன்ற தலைவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுதல், உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கோவிலை சுற்றிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com