மரபணு பரிசோதனை செய்ய வேங்கைவயலைச் சோ்ந்த 8 பேரும் நீதிமன்றத்தில் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து இதுதொடா்பான உத்தரவை வரும் ஜூலை 4ஆம் தேதிக்கு நீதிபதி எஸ். ஜெயந்தி ஒத்திவைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் தலித் குடியிருப்பின் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விசாரிக்கும் சிபி சிஐடி போலீஸாா், தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவை வேங்கைவயல் மற்றும் இறையூா் பகுதி மக்களின் மரபணுவுடன் ஒப்பிட்டுப் பாா்க்க முடிவு செய்தனா்.
இதுதொடா்பாக கடந்த ஏப்ரலில் 11 பேருக்கு மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது. ஆனால், 3 போ் மட்டுமே ரத்த மாதிரிகளைக் கொடுக்க வந்தனா். 8 போ் வரவில்லை. தொடா்ந்து, உயா் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குத் தொடா்ந்தனா்.
அந்த வழக்கில், மனுதாரா்களின் கருத்தையும் விசாரணை நீதிமன்றத்தில் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் வெள்ளிக்கிழமை ஆஜராயினா்.
அப்போது அவா்களிடம் சிபி சிஐடி போலீஸாா் மரபணு பரிசோதனை செய்யக் கோருவது குறித்து சனிக்கிழமை பிற்பகல் ஆஜராகி கருத்துகளைத் தெரிவிக்கலாம் என விளக்கப்பட்டது.
அதன்படி நீதிபதி எஸ். ஜெயந்தி முன்னிலையில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஆஜரான 8 பேரும் மரபணு பரிசோதனையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், பாதிக்கப்பட்ட தங்களையே குற்றவாளிகளாக சித்தரிக்க போலீஸாா் முயற்சிப்பதாகவும் தெரிவித்தனா்.
அதற்கு சிபிசிஐடி தரப்பில் அவ்வாறு குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சிக்கவில்லை என்றும், இந்த வழக்கில் இதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இதுகுறித்த உத்தரவை வரும் ஜூலை 4ஆம் தேதி பிறப்பிப்பதாக நீதிபதி எஸ். ஜெயந்தி அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.