மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி முறியடிக்கப்படும்: இபிஎஸ்-க்கு துரைமுருகன் பதில்!

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

News image

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்

Updated On :3 ஜூலை 2023, 12:27 pm

DIN

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கர்நாடகத்தின் அணை கட்டும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு அவ்வப்போது பிரச்னையை எழுப்பி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சியும் தற்போது இதுகுறித்த பிரச்னையை எழுப்பி வருகிறது.

மேக்கேதாட்டுவில் அணையைக் கட்டுவோம், பின்வாங்க மாட்டோம், காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு தரப்படாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 

மேக்கேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக ஏற்கெனவே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் இன்று(திங்கள்கிழமை) காலை ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக துணை முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசு சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி இவ்வாண்டும் ஜூன் 12 அன்று குறுவை சாகுபடிக்காக முதல்-அமைச்சரால் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, தொடர்ந்து தேவைக்கேற்ப நீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் குறுவை சாகுபடியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்தாண்டு ரூ.61.09 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்புத் திட்டத்தையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். டெல்டா பாசன விவசாயிகளும் சாகுபடி வேலைகளை முழு வீச்சாக செய்து வருகின்றனர் என்பதை அனைவரும் அறிவோம்.

விவசாயம் செய்வதற்குத் தேவையான நீர் அனைவருக்கும் சீராகக் கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் முன்கூட்டியே தூர்வாரப்பட்டு நீர்ப்பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தேவையான முயற்சிகளை அனைத்து மட்டங்களிலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரினை அளிக்குமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரை தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, 16.6.2023 அன்று நடந்த 21-ஆம் கூட்டத்தில் வலியுறுத்தினார். 

கர்நாடகத்திலிருந்து ஜூன் மாதத்தில் குறைவாக வழங்கப்பட்ட நீர் குறித்தும், ஜூன் 30 அன்று நடைப்பெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கவனத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருக்கு ஜூலை 3 அன்று எழுதிய கடிதத்தில், குறைபாட்டை நிவர்த்திக்கவும், ஜூலை மாதத்தில் அட்டவணைப்படி கர்நாடகா நீர் அளிக்க அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு தமிழக அரசு விவசாயிகளின் பாசனத்திற்கேற்ப நீர் அளிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

கர்நாடக அரசு அவ்வப்போது மேக்கேதாட்டு பிரச்சனையை எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது. இது அரசியல் நிர்பந்தத்தினாலோ என்னவோ தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. 

கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பதவி ஏற்றவுடன் மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து பேசிய செய்திக்கு உடனேயே நான் மறுப்புத் தெரிவித்திருந்தேன். அண்மையில் கர்நாடக துணை முதல்வர் மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி குறித்து பேசியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இது வருந்தத்தக்கது. கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேக்கேதாட்டு அணை திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. 

இத்திட்டம் குறித்து, எற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார். நானும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கும்போதெல்லாம் (6.7.2021, 16.7.2021 மற்றும் 22.6.2022) இக்கருத்தை வலியுறுத்தியுள்ளேன். மத்திய நீர்வளத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டின் இசைவில்லாமல் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது எனக் கூறியுள்ளார்கள்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு இப்பிரச்னை குறித்து தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தவிர, மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்த பொருள் பற்றி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தியபோதெல்லாம் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, 10.02.2023, 11.04.2023 மற்றும் 16.06.2023 நாட்களில் நடைபெற்ற ஆணையத்தின் கூட்டங்களில் இப்பொருள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இத்திட்டம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து கர்நாடகத்தின் அணை கட்டும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும். இவ்வாறு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், காவிரி விவசாயப் பெருங்குடி மக்களின் நலன் கருதியும், இவ்வாண்டு விவசாயத்திற்கு தடையின்றி நீர் வழங்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும். மேக்கேதாட்டு அணை பிரச்சனை குறித்தும் தக்க நடவடிக்கைகளை இவ்வரசு எடுக்கும் என்பது உறுதி. இப்பிரச்னையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்' என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.