
திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நூல் பேல்கள் எரிந்து சேதமடைந்தன.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர் ஆரிப்கான் (30), இவர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து நூல் பேல்களை கடந்த ஜூன் 30 ஆம் தேதி லாரியில் ஏற்றியுள்ளார். இந்த நூல் பேல்களை பெருமாநல்லூரியில் உள்ள நாகேந்திரன் என்பவருக்குச் சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் இறக்குவதற்காக வந்து கொண்டிருந்தார்.
இந்த வாகனம் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் வந்தபோது லாரியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் ஆதிர்ச்சியடைந்த ஆரிப்கான் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதன்பேரில் ஊத்துக்குளி, அவிநாசி, திருப்பூர் வடக்கு, பெருந்துறை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஒரு வழியாக இரண்டரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் லாரியில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான நூல் பேல்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் குளத்துப்புதூர் பகுதியில் உள்ள சாய ஆலையில் பாய்லர் வெடித்து வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் குளத்துப்புதூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள பாய்லரில் இருந்த ஆயில் சூடாகியதால் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பல அடி தொலைக்கு தீ மேல் எழும்பியுள்ளது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் தீ அணைக்கும் பணியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஈடுபட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...