வேலூரில் துணிகரம்: கோயில் உண்டியலை உடைத்து தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்!

வேலூரில் கோயில் உண்டியலை உடைக்க போராடி முடியாததால் அப்படியே பெயர்த்து அலாக்காக தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அங்கிருந்த  சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து அரியூர் போலீசார் விசாரணை
துத்திப்பட்டு என்ற இடத்தின் அருகே ரயில்வே தண்டவாலத்தின் ஓரத்தில் திருடர்கள் வீசிச்சென்றுள்ள உடைக்கப்பட்ட கோயில் உண்டியல்.
துத்திப்பட்டு என்ற இடத்தின் அருகே ரயில்வே தண்டவாலத்தின் ஓரத்தில் திருடர்கள் வீசிச்சென்றுள்ள உடைக்கப்பட்ட கோயில் உண்டியல்.

வேலூர்: வேலூரில் கோயில் உண்டியலை உடைக்க போராடி முடியாததால் அப்படியே பெயர்த்து அலாக்காக தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அங்கிருந்த  சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து அரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலூர் அடுத்த சித்தேரி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பூஜை செய்வதற்காக பூசாரி வந்த போது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து பூசாரி கோயில் தர்மகர்த்தா ரவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து அரியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இதில் திருடு போன உண்டியல் கோயிலில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள சித்தேரி ரயில்வே தண்டவாளம் அருகே கிடப்பது கண்டறியப்பட்டது. 

தொடர்ந்து கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  

கோயில் உண்டியலை உடைக்க முயற்சிக்கும் திருடர்கள்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முகத்தை மறைத்தபடி அரைக்கால் சட்டையுடன் வந்த இரண்டு திருடர்கள் கோயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த வெள்ளியால் செய்யப்பட்ட உண்டியலை இரும்பு ராடு கொண்டு உடைக்க முயற்சித்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் உண்டியலை உடைக்க முடியாமல் பதற்றமடைந்துள்ளனர். பின்னர் தாங்கள் பட்ட கஷ்டம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக. கன நொடியில் யோசித்து உண்டியலை அப்படியே அலாக்காக தூக்கிக்கொண்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தூக்கிக் கொண்டு சென்றவர்கள், துத்திப்பட்டு என்ற இடத்தின் அருகே காட்பாடியில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயில்வே தண்டவாலத்தின் ஓரத்தில் வைத்து உண்டியலை உடைத்துள்ளனர். 

பின்னர், அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

திருடர்கள் உண்டியலை உடைக்க முடியாமால் திணறிய காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

மேலும், இக்கோயிலில் ஜூன் 1 ஆம் தேதி கும்பாபிஷேகமும், கடந்த சில நாட்களாக மண்டல பூஜையும் நடைபெற்றுள்ளதாகவும். அதேசமயம் கடந்த ஆறு மாதங்களாக உண்டியல் பணம் வெளியே எடுக்காத சூழலில் தான் கோயில் உண்டியல் திருடப்பட்டுள்ளது. உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் இருந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. 

இதனை அடுத்து கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையிலும், கிடைக்கப்பெற்ற சிசிடிவி கேமாராவில் பதிவான காட்சியை அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பதிவு செய்த அரியூர் காவல்துறையினர் தப்பிச்சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com