அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஆக. 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்
Published on
Updated on
1 min read

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை தொடா்ந்துள்ள வழக்கில், தங்களையும் சோ்க்க கோரிய அமலாக்கத்துறையினரின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து தூத்துக்குடி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2001-2006 இல் அதிமுக ஆட்சியின்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தாா். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சோ்த்ததாக கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரா்கள் உள்பட 7 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், தங்களையும் ஒரு மனுதாரராகச் சோ்க்கக் கோரி அமலாக்கத் துறையினா் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா். இதனிடையே, வழக்கு விசாரணை 80 சதவீதம் முடிவடைந்துள்ளதால் அமலாக்கத் துறையை சோ்க்க முடியாது என லஞ்ச ஒழிப்பு துறையினா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், அமலாக்கத் துறையினா் தாக்கல் செய்த மனு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை. அவரது மகன்கள் ஆனந்த் ராமகிருஷ்ணன், ஆனந்த் மகேஸ்வரன் ஆஜராயினா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம், விசாரணையை ஆக. 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com