
தாராபுரம் தாலுகா, குண்டடம் அருகே டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான லாரி.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே இன்று காலை சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி டீக்கடையில் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியில் கலாமணி என்பவர் சாலையோரம் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரியை சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த ரத்தினகுமார் என்ற ஓட்டுநர், திருப்பூர் நோக்கி ஓட்டி வந்தார். இந்த லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடையில் புகுந்தது.
இந்தக் கொடூர விபத்தில், கடையில் பணியாற்றி வந்த முத்துச்சாமி (65), டீ அருந்திக் கொண்டிருந்த தோழன் (70) என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் ரத்தினகுமார் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, தாரபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் டீ அருந்திக் கொண்டிருந்த மேலும் 5 பேர் படுகாயமடைந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் லாரி டீ கடையின் உள்ளே சென்றதால், அதனை வெளியே எடுக்க முடியாத நிலையில், தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை டீக்கடையிலிருந்து அகற்றினர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...