மாநில நலனுக்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபடவில்லை- ஆளுநர் தமிழிசை 

மாநில நலனுக்கு எதிரான எந்தவொரு செயலிலும் தாம் ஈடுபடுபடுவது இல்லை என புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
மாநில நலனுக்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபடவில்லை- ஆளுநர் தமிழிசை 
Published on
Updated on
1 min read

மாநில நலனுக்கு எதிரான எந்தவொரு செயலிலும் தாம் ஈடுபடுபடுவது இல்லை என புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் மாவட்ட ஆட்சியரகத்தில் சட்டப்பேரவை  உறுப்பினர்கள், பல்வேறு  அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற மாவட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இக்கூட்டத்தில் புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மணிஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

பகல் 12.30 முதல் 2 மணி வரை நடைபெற்ற கூட்டத்தின் நிறைவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காரைக்கால் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டது. காரைக்கால் நகரப் பகுதியில் புதிதாக குடிநீர் குழாய் பதிப்பு செய்து தண்ணீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் ஏறக்குறைய நிறைவு நிலையை எட்டியுள்ளது. 

பள்ளிகளில் ஆசிரியர்கள்  பற்றாக்குறை இருப்பதாகவும், மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் நியமிப்பதன் அவசியம் குறித்தும், காவல்துறையில் காலியிடங்கள்  நிரப்புவது குறித்தும் விரிவாக பேசப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டால், செல்ல மறுக்கிறார்கள். இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்.  காரைக்கால் வளர்ச்சி எந்தவிதத்திலும் தடைப்படாது. 
காரைக்காலை அரசு புறக்கணிக்கவில்லை. பல்வேறு  புதிய திட்டப்பணிகள் நடைபெறவுள்ளன. காரைக்கால் சிறந்த வளர்ச்சியை எட்டும்.

ஆளுநரகத்துக்கு வரும் கோப்புகள்  விரிவாக ஆராயப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்படுகிறது. கோப்புகள் தேக்கம் கிடையாது.

மாதந்தோறும் 15-ஆம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இது நல்ல நிலையில் நடப்பதால் மக்கள் வரவேற்பு தெரிவிக்கிறார்கள் என்றார். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து சட்டப்பேரவையில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கோப்பை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக புகார் கூறப்படுவது குறித்து செய்தியாளர் கேட்டபோது, புதுவை மாநில நலனுக்கு எதிரான எந்தவொரு  செயலிலும் நான் ஈடுபடுவதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com